கெமிக்கல் பூச்சிக்கொல்லிகளை குறிவைத்து தின்று.. சத்துக்களாக மாற்றும் அதிசய பாக்டீரியா கண்டுபிடிப்பு!
மும்பை: இந்த காலத்தில் விவசாயத்திற்கு நாம் ஏகப்பட்ட கெமிக்கல்களை பயன்படுத்துகிறோம். இது நாளடைவில் விவசாய நிலத்தை மோசமாகப் பாதித்து, விளைச்சலையும் தடுக்கிறது. இதற்கிடையே கெமிக்கல் பூச்சிக்கொல்லிகளைக் குறிவைத்துத் தின்று, அதைச் சத்துக்களாக மாற்றும் அதிசய பாக்டீரியாவை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது விவசாய துறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது.
விவசாயம் என்பது நாளுக்கு நாள் சவால் மிகுந்த ஒன்றாக மாறி வருகிறது. அதிலும் சமீப காலமாகவே மண் மாசுபடுவது தான் விவசாயத்தில் மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது.
பூச்சிக்கொல்லிகள்:
விவசாய பயிர்களை அழிக்கப் பூச்சிக்கொல்லிகளை (pesticides) விவசாயிகள் அதிகம் பயன்படுத்தும் நிலையில், அதுவே மண் மாசுபடவும் முக்கிய காரணமாக இருக்கிறது. அது அடுத்த முறை பயிர்கள் வளர்ச்சியைப் பாதித்து விளைச்சலையும் குறைக்கிறது. இதற்கு முழுமையான தீர்வு எதுவும் இல்லை. கெமிக்கல் முறையைப் பின்பற்றுவது அல்லது மண்ணை மொத்தமாக மாற்றுவதே ஓரளவுக்குச் சமாளிக்கக்கூடிய தீர்வாக இருக்கிறது. அதேநேரம் இது அதிக செலவு வைக்கக்கூடியது. மேலும், சிக்கலையும் முழுமையாகத் தீர்ப்பதில்லை.
இதற்கிடையே மும்பையைச் சேர்ந்த ஐஐடி ஆய்வாளர்கள் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் இறங்கினர். இதற்காக அவர்கள் டாக்சிக் சூழல்களில் ஆய்வு செய்த போது அதில் குறிப்பிட்ட ஒரு வகை பாக்டீரியாவை அடையாளம் கண்டுள்ளனர். அதில்சூடோமோனாஸ் மற்றும் அசினெட்டோபாக்டர் ஆகிய பாக்டீரியா வ வகைகள் இந்த பூச்சிக்கொல்லிகளைக் குறிவைத்து காலி செய்வது தெரிய வந்துள்ளது.
அதிசய பாக்டீரியா:
இது குறித்த ஆய்வு முடிவுகள் என்விரான்மென்டல் டெக்னாலஜி அண்ட் இன்னோவேஷன் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது இந்த மண்ணிலிருக்கும் கெமிக்கல் பூச்சிக்கொல்லிகளைக் குறிப்பிட்ட பாக்டீரியா வகைகள் மூலம் ஆய்வாளர்கள் அகற்றியுள்ளனர். இந்த பாக்டீரியாக்கள் கெமிக்கல் பூச்சிக்கொல்லிகளைத் தின்று, அதைச் சத்துக்களாகவும் மாற்றுகிறதாம்.
இது தொடர்பாக ஐஐடி பாம்பே ஆய்வாளர்கள் கூறுகையில், “இந்த பாக்டீரியாக்கள் பிரச்சினைக்குரிய விஷயங்களைக் குறிவைத்துத் தின்றுவிடுகிறது. அதை எளிமையான, பாதிப்பில்லாத, நச்சுத்தன்மை இல்லாதவையாக மாற்றுகின்றன. இது இயற்கையாக மண்ணை சுத்தப்படுத்துகிறது. இதில் மற்றொரு விஷயத்தையும் நாங்கள் கவனித்தோம். அதாவது மாசு ஏற்படுத்தும் கெமிக்கல்களை காலி செய்யும் இந்த பாக்டீரியாக்கள் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் தருகிறது. அதைத் தாவரங்கள் எளிதாக உறிஞ்சிக் கொள்கிறது.
என்ன நடக்கிறது
மேலும், தாவரங்களுக்கு இரும்புச் சத்து தரும் சைடரோஃபோர்ஸ் எனப்படும் ஒன்றையும் இந்த பாக்டீரியா உற்பத்தி செய்கிறது. இப்படி தாவர வளர்ச்சிக்கும் இது பங்களிக்கின்றன. அதாவது இவை பூச்சிக்கொல்லிகளைக் கொல்வது மட்டுமின்றி, தாவரங்கள் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வளர உதவுகின்றன.. மேலும் மண்ணை உரமாக்கி, மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
சூடோமோனாஸ் மற்றும் அசினிடோபாக்டர் வகையைச் சேர்ந்த பாக்டீரியாக்களின் கலவையைப் பயன்படுத்தும் போது கோதுமை, வெண்டைக்காய், கீரை, வெந்தயம் போன்றவற்றின் சாகுபடி 45-50% வரை அதிகரிக்கவும் செய்வதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.
பூஞ்சை நோய்:
உலகெங்கும் பயிர்களை அச்சுறுத்தும் மற்றொரு மேஜர் பிரச்சினையாகப் பூஞ்சை நோய்கள் உள்ளன. பூஞ்சை தொற்றுகள் ஆண்டுதோறும் 10-23% வரையிலான பயிர்களை காலி செய்கின்றன. அந்த பிரச்சினைக்கும் இந்த பாக்டீரியாக்கள் தீர்வை தருகிறது. அதாவது இந்த வகை பாக்டீரியாக்கள் உற்பத்தி செய்யும் லைடிக் என்சைம்கள் மற்றும் ஹைட்ரஜன் சயனைடு ஆகியவை பூஞ்சைகளையும் அழிக்கிறது. மேலும், தாவரங்களுக்கு இயற்கையான பாதுகாப்பு அமைப்பாகச் செயல்படுகின்றன என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இது விவசாயிகளுக்கு நிச்சயம் பேருதவியாக இருக்கும் என்றாலும் இது இப்போது தான் தொடக்க நிலையில் இருப்பதாகவும் இதை விவசாயிகள் பின்பற்ற சில காலம் எடுக்கும் என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும், இதைப் பல பகுதிகளில் வைத்துப் பல சூழல்களில் சோதிக்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இருந்தாலும் கெமிக்கல் பூச்சிக்கொல்லிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி ஒன் இந்தியா