ஜாதிக்காய் உற்பத்தியும், விற்பனையும் அதிகரிக்கும்!
பொள்ளாச்சியில் உருவெடுத்துள்ள ஜாதிக்காய் சாகுபடி குறித்து, ஆனைமலை வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் கோபிநாத்
பொள்ளாச்சி என்ற பெயரை உச்சரித்தாலே தென்னை தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக விவசாய தொழிலாளர்கள் கூலி உயர்வு, தேங்காய் விலை வீழ்ச்சி, வாடல் நோய் உள்ளிட்ட பிரச்னைகளால் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் வருவாய் இழப்பை ஈடு செய்யும் விதமாக, கடந்த சில ஆண்டுகளாக தென்னையில் ஊடுபயிராக ஜாதிக்காய் பயிர் செய்து வருகின்றனர்.
ஜாதிக்காயில் இருந்து கொட்டை, ஜாதிபத்திரி பூ ஆகிய இரண்டு நறுமண பொருட்கள் பெறப்படுகின்றன. நம் நாட்டில் ஆண்டுக்கு, 4,540 டன் ஜாதிக்காய் தேவைப்படுகிறது.
ஆனால், 2,150 டன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. ஜாதிபத்திரி ஆண்டுக்கு, 760 டன் தேவை. ஆனால், 300 டன் தான் நம் நாட்டில் கிடைக்கிறது.
எனவே, ஜாதிக்காய் உற்பத்தியை அதிகரிக்க, மத்திய, மாநில அரசுகள் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
ஆனைமலை சுற்று வட்டாரப் பகுதிகளில், 500 ஏக்கர் தென்னந்தோப்பில் ஊடுபயிராக ஜாதிக்காய் சாகுபடி நடைபெற்று வருகிறது.
இதில் விவசாயிகளுக்கு நிறைவான லாபம் கிடைப்பதால், இன்னும் ஏராளமான தென்னை விவசாயிகள் ஜாதிக்காய் சாகுபடியில் இறங்க முனைப்பு காட்டி வருகின்றனர்.
அடுத்த ஆண்டு தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் வயிலாக அதிக எண்ணிக்கையில் நாற்றுகளை வழங்க பரிந்துரை செய்துள்ளோம்.
கோட்டூர் பகுதி தென்னை விவசாயியும், பொள்ளாச்சி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான ரஞ்சித்குமார்:
எங்கள் நிறுவனத்தில், 100 விவசாயிகள் மட்டுமல்லாமல், மற்ற விவசாயிகள் உற்பத்தி செய்யக் கூடிய ஜாதிக்காய்களையும் விலைக்கு வாங்குகிறோம்.
கடந்தாண்டு நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு, 35,000 கிலோ ஜாதிக் காய்களும், 300 கிலோ ஜாதிபத்திரி பூக்களும் விற்பனை செய்தோம்.
நெதர்லாந்து நிறுவனம் இதற்கு முன் கேரளாவில் இருந்து தான் ஜாதிக்காய் வாங்குவர்; ஆனால், அதைவிட பொள்ளாச்சி பகுதியில் விளையும் ஜாதிக்காய் தரமாக இருக்கும் என சொல்லி, மிகவும் விரும்பி வாங்குகின்றனர்.
அடுத்தடுத்த ஆண்டுகளில் பொள்ளாச்சி மற்றும் இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜாதிக்காய் உற்பத்தியும், விற்பனையும் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.
தொடர்புக்கு:
ரஞ்சித்குமார் –
90807 46461
கோபிநாத் –
986579 05505
நன்றி:தினமலர்