நீர் மேலாண்மை குறித்த அறிவிப்பு
தமிழகத்தின் பல மாவட்டங்களில் நிலத்தடி நீர் கிடுகிடுவென குறைந்தும், கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் குறைந்தும், பகல் நேர வெயிலின் தாக்கம் அகோரமாக அதிகரித்தும் வரும் சூழ்நிலையை பார்க்கிறோம்.
நிலங்களில் நீர் மேலாண்மையை முறைப்படுத்த கீழ்கண்ட செயல்களை செய்யலாம்.
1. எந்தப் பயிறும், எந்த நிலத்திலும் வறட்சியால் இறந்து போகாத வண்ணம் உங்கள் செயல்பாடுகளை திட்டமிடலாம். இருக்கும் தண்ணீரை உங்கள் நிலத்தின் தன்மைக்கேற்ப பயிரின் வளர்ச்சி நிலைக்கேற்ப எவ்வாறு கொடுக்கலாம் என்று யோசிக்கலாம்.
2. எந்த ஒரு பயிருக்கும் அதிகாலை அல்லது மாலை பொழுதுகளில் மட்டுமே நீர் பாசனம் செய்யலாம். நிலம் வெடித்து தெரிந்தாலும் அடியிறம் உள்ளதா என்பதை ஆய்வு செய்த பின்பு நீர் பாய்ச்சவது அழுகல் வராமல் தடுக்கும்.
3. சொட்டுநீர் அமைப்பு மூலம் மட்டுமே தண்ணீர் பாய்ச்சலாம். தெளிப்பு நீரை தவிர்ப்பது நல்லது. மணல் மற்றும் சரளை நிலங்களில் ஒரே நேரத்தில் ஒரு மணி நேரம் தண்ணீர் பாய்ச்சுவதைத் தவிர்த்து காலை அரை மணி நேரம் மாலை அரை மணி நேரம் என்ற அளவில் நீர் பாய்ச்சலாம்.
4. வாய்க்கால் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதைத் தவிர்த்து பிவிசி பைப்புகள் மூலம் பாத்திகள் வரை தண்ணீர் கொண்டு செல்லலாம்.
5. தரை வழியாக தண்ணீர் தரும் எண்ணிக்கையை சற்று குறைத்து, தெளிப்பு மூலம் இயற்கை இடு பொருள்களுடன் கலந்து அதிகாலை அல்லது மாலை வேலைகளில் தெளிப்பது நல்லது
6. ஏற்கனவே நீர் வற்றும் வகையில் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு வைத்திருக்கும் விவசாயிகள் மிகவும் கவனமாகக் குறைந்த அளவு தண்ணீரை வேர் மண்டலத்தில் எடுத்து ஊற்றி அல்லது குழாய்கள் மூலமாக பாத்திகளுக்கு கொண்டு சென்று ஊட்டலாம்.
7. தென்னங்கீற்றுகளை நீர் செல்லும் வாய்க்காலில் போட்டு விடுவது, தென்னை மட்டைகளை இரண்டாக வெட்டி நிலத்தில் ஆங்காங்கே வெயில் விழும் பகுதிகளில் போட்டு விடுவது நல்லது.
8. தென்னை போன்ற பயிர்களின் வட்டப் பாத்தியில் கற்றாழை, தட்டைப்பயிறு வளர்ப்பது உயிர் மூடாக்காகவும் பயன்படும்.
9. காய்கறி பயிர்களின் மேலே பச்சை நிழல் வலையை நிலத்தின் ஏதாவது ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மூங்கில் குச்சிகளைக் கொண்டு கிழக்கு மேற்காக தற்காலிக பந்தல் அமைப்பது, வெயிலின் தாக்கத்தை குறைக்க உதவும்.
11. தரையில் அல்லது தொட்டிகளில் நீரை சேமிக்கும் போது பிளாஸ்டிக் போர்வைகள் அல்லது பச்சை நிழல் வலைகள் கொண்டு மேல் பகுதியை முடிந்த வரை மூடலாம்.
12. ஊடு பயிர் சாகுபடியை செய்வதால் நிலமூடாக்காக பயிர்கள் கிடைப்பதுடன், கொடுக்கும் குறைந்த அளவு தண்ணீரை கொண்டு நிறைய பயிர்கள் வளர்க்க வாய்ப்பாக இருக்கும்.
13. வாழை, மஞ்சள், கரும்பு, நெல்லில் குறைந்தபட்ச ஈரம் வைத்திருக்க வேண்டும். பூ எடுக்கும் நேரத்தில் நிச்சய ஈரம் வேண்டும். முக்கிய வளர்ச்சி பருவங்களில் ஈரம் இருப்பது நல்லது.
14. பூ எடுக்க வேண்டிய உளுந்து, எள்ளு போன்ற பயிர்களுக்கு அதிகாலை அல்லது மாலை வேளையில் தெளிப்பு முறையில் பாசனம் செய்வதும் சத்துக்கள் கொடுப்பதும் நல்லது.
15. மரப் பயிர்கள் வைத்திருக்கும் விவசாயிகள் கீழே விழுந்த காய்ந்த இலைகளை நான்கு மரங்களுக்கு நடுவே வெயில் விழும் பகுதியில் பரப்பி விடுவது நல்லது.
16. மர பயிர்கள் மற்றும் பழ மரங்களுக்கு தரை வழியாக தண்ணீர் கொடுப்பதை தவிர்த்து, மரத்தை சுற்றி நான்கு அல்லது எட்டு இடங்களில் ஒரு அடிக்கு ஒரு அடி, ஒரு அடி ஆழக் குழி எடுத்து, அதனுள் சற்று களிமண், சாணம் இட்டு அதன் மேல் குறைந்த அளவு தண்ணீர் கொடுப்பது நல்ல பலன் தரும்
17. பகல் வேளையில், வெயில் நேரத்தில் நீர் பாய்ச்சுவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
18. மாடித்தோட்டத்தில் ஒரே நேரத்தில் நிறைய தண்ணீர் தருவதை தவிர்த்து சிறிது சிறிதாக காலை மற்றும் மாலையில் நீர் பாய்ச்சலாம்.
19. இயற்கை வழி கரைசல்கள் ஆன தேமோர் கரைசல், பஞ்சகாவியா, இ. எம் கரைசல், மீன் அமிலம் போன்ற ஏதேனும் ஒரு திரவத்தை 10 லிட்டர் தண்ணீரில் 200 மில்லி கலந்து தெளிப்பான் மூலம் வாரம் ஒரு முறை தெளிப்பது நல்லது.
20. வறட்சியைத் தாங்க உதவும் பி.ப்பி.ஃப்.எம் (PPFM) என்ற உயிரியல் திரவத்தை அருகில் உள்ள வேளாண் ஆராய்ச்சி நிலையங்களில் பெற்று, முறையாகத் தெளித்து பயிர் சாகாமல் பார்த்துக் கொள்ளலாம்.
பிரிட்டோராஜ்
வேளாண் பொறியாளர்
9944450552