கார்பரேட் நலன்களுக்காக பலியாகும் விவசாயம்!
மண் மலடானது. விவசாயம் நஞ்சானது. உணவில் சத்தும், சுவையும் குறைந்து வருகின்றன. நோய்கள் பல்கி பெருகி வருகின்றன. தற்போதும் கூட இயற்கை விவசாயத்திற்கு எவ்வளவு எதிர்ப்புகள்! ‘கார்ப்பரேட் லாபி’ மிக வலுவாக விவசாயத்தில் நிலவுவதை மீறி எப்படி தற்சார்பு விவசாயத்தை சாத்தியமாக்கப் போகிறோம்..?
”விளைச்சலை அதிகரிக்கவே ரசாயன உரங்களை அறிமுகப்படுத்தினோம்” எனச் சொல்கிறார்கள்! அந்த ரசாயன உரங்களால் மண் வளம் குறைந்தது. ஆகவே, ”இன்னும் வீரிய ரசாயன உரங்களைப் போடுங்கள்” என சிபாரிசு செய்தார்கள்! விவசாயிகளும் கூடுதல் பணம் செலவழித்து வீரிய ரசாயன உரங்களை வாங்கினார்கள்! அவை இன்னும் மண்ணின் வளத்தை சூறையாடின! இதனால், மண்ணில் உள்ள இயற்கை சத்துக்கள் எல்லாம் உறிஞ்சப்பட்டு அது மலட்டு மண்ணாகிவிட்டது. ஒரு கட்டத்தில் அந்த மண் விவசாயத்திற்கே பயனில்லாமல் ஆனது. இந்த வகையில் இன்று இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கு விவசாய நிலங்கள் பயன்பாடு இல்லாமல் போய்விட்டன! இன்றும் தொடர்ந்து ரசாயன உரங்களைப் பயன்படுத்தி வருபவர்களைக் கேட்டால், ‘எங்கள் நிலங்களில் உற்பத்தி குறைந்துள்ளது’ என்பதை ஒத்துக் கொள்வார்கள்!
பசுமைப் புரட்சியால் விளைச்சல் அதிகரித்ததாம். பற்றாக்குறை முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாம்! உண்மை என்ன? பசுமை புரட்சிக்கு முன்பு ஒரு ஏக்கர் நிலத்தில் இயற்கை உரத்தின் மூலம் 2,200 கிலோ முதல் 3,000 கிலோ வரை நெல் உற்பத்தி செய்தார்கள். இரசாயன உரங்கள் அவற்றில் போடப்பட்ட போது, அதில் பத்து முதல் பதினைந்து சதவிகித கூடுதல் விளைச்சலை அவை தந்தன. ஆனால், காலப் போக்கில் மண் வளம் கெட்டு விளைச்சல் படிப்படியாகக் குறைந்து தற்போது ரசாயன உரங்கள் போட்டு செய்யப்படும் விவசாயத்தில் ஒரு ஏக்கருக்கு 1,600 கிலோ முதல் 2,000 கிலோ வரையே எடுக்க முடிகிறது. இது இன்னும் போகப் போகக் குறையக்கூடும். ஆகவே, தற்போது சற்று அரைகுறையாகவேணும் இயற்கை உரங்களையும் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆனால், முழுமையான இயற்கை விவசாயம் செய்பவர்கள் செலவில்லாமல் 2,000 கிலோ அரிசி எடுக்கிறார்கள்.
விவசாய நிலங்கள் வளமாக அமைவதற்கு மண் புழுக்கள் பெருமளவில் உதவுகின்றன. மண் புழுக்கள் நிலத்தில் மேலும் கீழும் பக்கவாட்டிலும் ஊர்ந்து செல்லும் போது ஏற்படும் துவாரம் வழியாக மண்ணில் காற்றோட்ட வசதி அதிகமாகும். ரசாயன உரங்களால் மண் இறுகி விடுவதால் காற்றோட்ட வசதி குறைவாகிவிடுகிறது. ரசாயன உரங்கள் மண்ணில் உள்ள கரிம சத்துக்களை அழித்துவிடுகின்றன. முன்பெல்லாம் 2 ,முதல் 3 சதவிகித கரிம சத்துக்கள் மண்ணில் நிறைந்திருந்தன. அது 1970 களின் தொடக்கத்தில் 1.20 சதவிகிதமாகக் குறைந்தது. 2008ல் 0.98 சதவிதமானது. தற்போதோ 80 சதவிகிதமாகிவிட்டது! இதனால் தான் நாம் சாப்பிடும் அரிசியிலோ காய்கற்களிலோ, பழங்களிலோ சத்தும், சுவையும் குறைந்து காணப்படுகிறது.
மண்ணின் வளம் நன்றாக இருக்க வேண்டுமானால் மண்ணில் கரிமச் சத்தின் அளவு 2 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் நுண்ணுயிர்கள் மற்றும் மண் புழுக்களின் எண்ணிக்கை மற்றும் செயல்பாடு அதிகரித்து மண் வளத்தை பெருக்க முடியும்.இதை எந்த ரசாயன உரத்தாலும் செய்ய முடியாது. அதை இயற்கை உரங்களைப் போட்டுத் தான் மண் வளத்தை அதிகரிக்க முடியும். அப்பொழுது தான் நுண்ணுயிர்கள் மற்றும் மண் புழுக்களின் எண்ணிக்கை மற்றும் செயல்கள் அதிகரித்து மண் வளத்தை பெருக்க முடியும்.
”மூன்று மூட்டை ரசாயன உரம் தரும் சத்தை கொழிஞ்சி செடியின் பசுந்தாள் உரத்தில் பெறலாம்” என அனுபவமுள்ள விவசாயிகள் சொல்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு நாட்டுமாடு போதுமானது மண்ணை வளப்படுத்த! 30 ஏக்கர் நிலத்தை ஒரே நாட்டு மாடு உயிர்பித்துக் கொடுத்து விடும். அதன் சாணம், மூத்திரம், பால், தயிர், நெய் ஆகியவற்றைக் அடிப்படையாகக் கொண்டு அமுதகரைசல், பஞ்சகாவ்யா, ஜீவாமிர்தம், கன ஜீவாமிர்தம் போன்ற அங்கக உரங்கள் தயாரிக்கலாம். மாட்டு கோமியத்தில் லட்சகணக்காண நலம் தரும் நுண்ணுயிர்கள் உள்ளன.
எனவே, விவசாயிகள் நாட்டு மாட்டில் கிடைக்கும் பொருட்களை வீணாக்காமல் பயன்படுத்தி ரசாயன உரங்களைத் தவிர்த்து மண்ணை வளப்படுத்தலாம்.
ரசாயன உரங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால், மண்ணில் காட்மியம், ஆர்சனிக் மற்றும் யுரேனியம் போன்ற நச்சு இரசாயனங்கள் உருவாகின்றன.
வயல்களில் தூவப்படும் ரசாயன உரங்களில் கணிசமானவை பாசன நீரில் கரைந்து அடித்துச் செல்லப்பட்டு வெளியேறி, மண்ணில் ஊடுறுவி நிலத்தடி நீரிலும் அருகிலுள்ள நீர் நிலைகளிலும் போய்ச் சேர்ந்து விடுகிறது. இங்கு தண்ணீருக்காக போர் போடும் போது 500 அடி ஆழம் வரைகூட ஆர்சனிக், காரீயம் போன்ற நச்சுகள் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்..!
நீர்நிலைகளில் ரசாயனங்கள் கலப்பதால் நீரை மாசுபடுத்தி, அதில் வாழும் உயிரினங்களுக்கு சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜனை குறைத்து விடுகிறது!
காய்கறிகளில் கலக்கிற ரசாயனங்களும், பூச்சிக் கொல்லிகளும், மைக்ரோ நியூடிரின்ஸ் என்கிற நுண்சத்துகளை முழுமையாக அழித்துவிட்டன. குறிப்பாக மாலிப்டினம், செலினியம் போன்ற தாதுக்களே இல்லாமல் செய்துவிடுகின்றன. இதனால் நமக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, நீரிழிவு, சிறு நீரக பாதிப்பு, ஆயுட்காலம் குறைவு, புற்றுநோய், ரத்தக் கொதிப்பு, நரம்புத் தளர்ச்சி, இதயநோய் என்று பல நோய்களை எதிர்கொள்கிறோம்.
இவ்வளவு மோசமான விளைவுகளை மனிதகுலம் சந்திக்க நேர்ந்த போதும், நமது வேளாண் விஞ்ஞானிகளுக்கு மனம் இரங்கவில்லை. அவர்கள் அறிவியலின் பெயரால் ரசாயன உரப் பயன்பாடுகளை திணிக்கவே செய்கிறார்கள்.
17 வது மக்களவையில் நமது நிதிஅமைச்சர் இயற்கை வேளாண்மையை அதிகரிக்க ஜீரோ பட்ஜெட்டை வளர்த்தெடுக்கும் வகையில் சற்று நிதி ஒதுக்குவதாக அறிவித்தவுடனே அதற்கு தேசிய வேளாண் அறிவியல் கழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ‘இயற்கை வேளாண்மை ஜீரோ பட்ஜெட் போன்றவை குறித்து போதிய ஆராய்ச்சிகளோ, தரவுகளோ இல்லாத நிலையில் அதை ஊக்கபடுத்தக் கூடாது’ என எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
‘எத்தனைக் கொடூர விளைவுகள் நேரினும் ரசாயன உரப் பயன்பாடு குறைந்து விடக் கூடாது. அதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் நஷ்டப்பட்டுவிடக் கூடாது’ என்பதே அவர்களின் ஒரே நோக்கமாக உள்ளது. அரிசியில் சத்துக்கள் குறைந்துள்ளன எனக் கூறி செறிவூட்டப்பட்ட அரிசியை நிர்பந்திக்கிறார்கள். அந்த செறிவூட்டப்பட்ட அரிசி குறித்த போதுமான ஆய்வுகளோ, தரவுகளோ செய்யப்படவில்லை. அவை தீமையான விளைவுகளை உருவாக்குவதாக மக்களிடம் இருந்து எதிர்ப்பும் கிளம்பி உள்ளன. இதற்கெல்லாம் வாய் திறக்காத தேசிய வேளாண் விஞ்ஞானிகள், ‘இயற்கை உரத்தால் மட்டுமே வளமான மண்ணை மீட்டெடுத்து சத்தான அரிசியை தரமுடியும் என்ற உண்மையை மறுதலிக்கிறார்கள்’ என்பது தான் வேதனையாக உள்ளது.
சுதந்திரத்திற்குப் பிறகு பல்லாயிரம் கோடிகள் செலவழித்து வெளி நாடுகளில் இருந்து ரசாயன உரம் தருவித்து தான் நாம் விவசாயம் செய்து உயிர்வாழ முடியும் என்ற துர்பாக்கிய நிலை உருவாகியுள்ளது. தற்சார்பு விவசாயத்தை இழந்து அன்னிய நாட்டு ரசாயன உரங்களை நம்பி வாழ்வது அவமானம்!
பல நூற்றாண்டுகளாக வேளாண்மை இங்கே செழித்தோங்கிய போது அதற்கு எந்த விஞ்ஞானமும் உதவவில்லை. அனுபவ பட்டறிவே விவசாயத்தில் ஆயிரமாயிரம் அற்புதங்களைக் கண்டறிந்து மக்களை ஆரோக்கியமாக வாழ வைத்தது. சமீப காலங்களில் அறிவியல் மூலம் எவ்வளவுக்கு எவ்வளவு நன்மையோ, அவ்வளவுக்கு தீமையும் மக்கள் அனுபவிக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. எனவே, ‘மனிதகுல நன்மைக்கான அறிவியல்’, ‘கார்ப்பரேட் நிறுவன வளர்ச்சிக்கு பாடுபடும் அறிவியல்’ என பாகுபடுத்தி பார்க்காவிட்டால் மனிதகுலம் அழிவிலிருந்து தப்ப முடியாது. விவசாய ரசாயன உரங்கள் தவிர்ப்போம்! நஞ்சில்லா உணவை சுவைப்போம்!
சாவித்திரி கண்ணன்
நன்றி;அறம் இணைய இதழ்