நாட்டுக் காய்கறிகளா… நாங்க இருக்கோம் வாங்க!
ஏழு இளைஞர்கள்… ஏராளமான யோசனைகள்
விதை சேகரிப்பாளர் கூட்டமைப்பினர்
எதற்கும் லாயக்கில்லை என்று இந்தக் காலத்து இளைஞர்களை அத்தனை எளிதில் சொல்லிவிட முடியாது. அவர்கள் எவ்வளவோ செய்கிறார்கள்; எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக இருக்கிறார்கள் தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் கூட்டமைப்பினர்.
புதுச்சேரி சுந்தர், வேலூர் யுவராஜ், அணைக்கட்டு பிரதீப்குமார், வேலூர் பிரதீப், கலசப்பாக்கம் சந்திரசேகர், காஞ்சிபுரம் ஆனந்த், திருப்பூர் பிரியா, சீர்காழி ராஜசேகர் – இந்த ஏழு இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சமுதாயத்திற்கு தேவையான நமது மரபு நாட்டுக் காய்கறிகள், இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, மரபு காய்கறி விதைகள் சேகரித்து அதை அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கும் அற்புதமான சேவையை செய்து வருகிறார்கள்.
இவர்கள் அனைவருமே பட்டதாரிகள், சாஃப்ட்வேர் கம்பெனிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றி, கைநிறையச் சம்பாதுத்துக் கொண்டிருந்தவர்கள். அதையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு இப்படி விதை சேகரிப்பை கையில் எடுத்திருக்கிறார்கள்.
விதை சேகரிப்பாளர்களின் ஒன்றுகூடல்
இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் இதுகுறித்த பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆரோக்கியமான நம்முடைய மரபுரக பாரம்பரியமான காய்கறி விதைகளை சேகரிப்பது, அவற்றை பயிரிடுவது, இயற்கை முறையில் சாகுபடி செய்வது, அவற்றை மக்களுக்கு குறைந்த விலையில் வழங்குவது, விதைகளை மற்ற விவசாயிகளுக்கு தருவது, மக்களிடம் நாட்டுக் காய்கறிகள், இயற்கை விவசாயம் ஆகியவற்றின் அவசியத்தை எடுத்துச் சொல்வது ஆகியவற்றையே முழுநேர பணியாக மேற்கொண்டிருக்கிறார்கள்.
புதுச்சேரியில் ‘உழுது உண்’ என்ற அமைப்பை நடத்திவருகிறார் சுந்தர், வேலூரில் சமுதாய விதைவங்கியை நடத்துகிறார் யுவராஜ், ‘தாய்மண்’ அமைப்பை நடத்திவருகிறார் பிரதீப்குமார், மூடாக்கு வனத்தை செயல்படுத்திவருகிறார் பிரதீப், கலசப்பாக்கம் சந்திரசேகர் ‘செங்காந்தள் வனம்’ என்ற பெயரில் அமைப்பை வைத்திருக்கிறார். காஞ்சிபுரத்தில் ‘நம்மவீட்டு காய்கறி’ என்ற பெயரில் இயங்குகிறார் ஆனந்த், திருப்பூரில் ‘விதைத்தீவு’ என்ற பெயரில் நாட்டுக்காய்கறிகள் குறித்த செயல்பாட்டில் இருக்கிறார் பிரியா, சீர்காழியில் ‘நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை’யில் இயங்குகிறார் ராஜசேகர்.
சுந்தர்
இப்படி தங்கள் பகுதிகளில் செயலாற்றிக் கொண்டிருந்தவர்களை ஒருங்கிணைத்தவர் புதுவை சுந்தர். இவரது தந்தை புற்றுநோயால் இறந்துவிட்டார். தந்தைக்கு புகை, மது என்று எந்த பழக்கமும் இல்லையே, பிறகு ஏன் புற்றுநோய் வந்தது? என்று ஆராயப் புகுந்தவருக்கு ஞானோதயம் கிடைத்தது. நாம் உண்ணும் உணவுதான் காரணம் என்பதை கண்டறிந்து தனது தந்தைக்கு நேர்ந்தது மற்றவர்களுக்கு நேரக்கூடாது என்று நினைத்தார். பார்த்துக் கொண்டிருந்த வேலையை துறந்துவிட்டு இயற்கை விவசாயத்தில் களம் புகுந்தார்
உணவு முறையில் அரிசி குறித்து மக்களிடம் தற்போது நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதால் அடுத்ததாக காய்கறிகளின் பக்கம் கவனத்தை திருப்பினார். நாட்டுக் காய்கறிகள்தான் நன்மை செய்வன என்பதை தானும் உணர்ந்து, மக்களுக்கும் உணர்த்தும் வேலையை கையிலெடுத்தார் சுந்தர். முதல் கட்டமாக, நாட்டுக் காய்கறிகளை கண்டறிந்து பயிரிட்டு அதை மக்களுக்கு கொடுக்கும் வேலையைச் செய்ய ஆரம்பித்தார். அடுத்ததாக, நாட்டுக்காய்கறி விதைகள் எங்கெல்லாம் கிடைக்கும் என்று தேடிப் பயணித்துக் கொண்டிருக்கிறார். அப்படி விதைகளைத் தேடும்போதுதான் இதேவேலையைச் செய்துவரும் விருட்சங்களாகிய இளைஞர்களையும் அடையாளம் கண்டார். அப்படித்தான் அனைவரும் ஒன்றிணைந்து ‘தமிழ்நாடு விதை சேகரிப்பாளர் கூட்டமைப்பை’ உருவாக்கினார்கள்.
நம்மாழ்வாருக்கு அஞ்சலி செலுத்தும் விதை சேகரிப்பாளர்கள்…
இவர்கள் இதுவரை 500-க்கும் மேற்பட்ட நாட்டுக் காய்கறி விதைகளை கண்டறிந்து அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். தங்களிடமுள்ள உள்ளூர் ரக காய்கறி விதைகளை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற செயல்பாடுகளில் உள்ள பல்வேறு விவசாயிகளை ஒருங்கிணைத்து அந்தந்த பகுதிகளில் ஒன்றுகூடல்களை நடத்துகிறார்கள். அப்படி இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஒன்றுகூடல்கள் நடந்திருக்கின்றன. அதன்மூலம் தங்கள் விதைகளையும், அனுபவங்களையும் அனைவருக்கும் கடத்துகிறார்கள்.
இதுகுறித்து சுந்தர் நம்மிடம் பேசினார், ‘’இது லாப நோக்கத்திற்காகவோ ஏதோ ஒரு தொழில் செய்ய வேண்டும் என்பதற்காகவோ நாங்கள் மேற்கொண்ட பயணமல்ல. நம்முடைய எதிர்கால சந்ததிக்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற உத்வேகத்துடன் துவக்கப்பட்டது. சேகரிப்பு ஒருபக்கம் என்றால் நாங்களே உற்பத்தி செய்து நேரடியாக விற்பனையும் செய்கிறோம். அதனால் எங்களுக்குத் தேவையான வருமானம் கிடைக்கிறது. அதைச் செய்துகொண்டே தேவையானவர்களுக்கு விதைகள் கொடுக்கிறோம். நாட்டுக் காய்கறி என்றால் என்ன? அது எப்படி விளைவிக்க வேண்டும்? எப்படி சமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்களை மக்களிடம் எடுத்துச் சொல்கிறோம்.
நாட்டுக் காய்கறி விதைகள்…
இப்போது நம்மில் அநேகம் பேர் சாப்பிடுவது உணவு அல்ல… விஷம் என்பதை நாம் உணரவே இல்லை. விஷத்தை நமக்கு பரிமாற விவசாயிகளும் விற்பனையாளர்களும் கொஞ்சம்கூட தயங்கவில்லை என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் உண்மை. நீங்கள் வாங்கும் காய்கறிகளில் ஒன்றுகூட உண்மையான நாட்டு காய்கறிகள் இல்லை. வட்டார அளவில் அந்தந்த பகுதிகளில் விளைவது மட்டுமே நாட்டுக்காய்கறிகளாக எடுத்துக் கொள்ளலாம். ஒரே அளவிலான, ஒரே நிறத்திலான, தக்காளியும், கத்தரிக்காயும், வெண்டைக்காயும் நாட்டு ரகங்கள் என உங்களுக்குச் சொல்லப்படும். நீங்களும் நம்புவீர்கள். ஆனால், ஒன்றுபோல இருக்கும் எதுவுமே நாட்டுக் காய்கறிகள் இல்லை; அவை ரசாயனம் தடவப்பட்டிருக்கும், அல்லது வீரிய விதையாக இருக்கும் என்பது நிச்சயம்.
அளவில், நிறத்தில், தன்மையில் வேறுபாடு கொண்டவைதான் இயற்கையானவை. சுத்தமான விஷமில்லா காய்கறி என்றால் அது நீங்களே விளைவித்ததாக மட்டும்தான் இருக்க முடியும். வீரிய விதைகளால் விளைச்சல் அதிகம் கிடைக்கும் என்பதைத் தவிர வேறு எந்த நன்மையும் கிடைக்காது. குறிப்பாக, காய்கறிகளை உண்பதால் கிடைக்கும் எந்த நன்மையும் அதில் கிடைக்காது. அவற்றின் பயன்கள் மட்டுப்படுத்தப்பட்டோ அல்லது ரசாயனங்களால் மாற்றப்பட்டோதான் இருக்கும்.
நாட்டுக் காய்கறிகள்…
நம்முடைய பாரம்பரிய காய்கறிகளில் கத்திரி, வெண்டை இருக்கிறது. அதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மென்பொருள் நிறுவனங்களில் தொடர்ச்சியாக ஒரே வேலையை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அதிலிருந்து சடாரென மீளமுடியாமல் ஒரு நிலை இருப்பதை அது மாற்றும். கத்திரிக்காய் சாப்பிட்டால் அரிக்கும் என்பார்கள். அது கத்திரிக்காயில் உள்ள ரசாயனங்களால் ஏற்படுவதுதானே தவிர கத்திரிக்காயால் ஏற்படுவதில்லை. அதைச் சாப்பிட்டால் தோலில் இருக்கும் கழிவுகள் தோலை விட்டு வெளியேறும். அதனால் அந்த அரிப்பு ஏற்படும். அதனால் அனைவரும் கத்திரிக்காய் சாப்பிட வேண்டும். சுரைக்காயைச் சாப்பிட்டால் உடம்பிலுள்ள உப்பை முழுவதுமாக வெளியேற்றிவிடும்.
இந்தந்தக் காய்கறிகளைத் தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. உங்கள் பகுதியில் விளையும் எந்தக் காயையும் நீங்கள் தயங்காமல் சாப்பிடலாம். ஆனால், அது இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட நாட்டுக் காய்கறிகளாக இருக்க வேண்டும் அவ்வளவுதான்” என்று அழுத்தமாகச் சொன்னார் சுந்தர்.
நம்மைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருக்காமல் எதிர்கால சந்ததியைப் பற்றியும் அறிவோடு சிந்துத்து ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடித்தளம் போடும் இந்த இளைஞர் களின் முயற்சி வெல்லட்டும். இவர்களின் முன்னெடுப்பு நாடு தழுவிய இயக்கமாக மாறட்டும்!
நன்றி:காமதேனு