யூரியாவுடன் உயிர் உரங்களையும் கட்டாயம் வாங்க வேண்டும் ! மத்திய அரசு அறிவிப்பு!
இயற்கை உரங்களை ஊக்குவிக்கவும், ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைக்கவும் விவசாயிகள் வாங்கும் ஒவ்வொரு மூட்டை யூரியாவுக்கும் உயிர் உரம் வாங்குவதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. ரசாயன உரங்களின் சீரான மற்றும் நிலையான பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக அமைக்கப்பட்ட குழு, யூரியாவை வாங்கும்போது உயிர் உரத்தையும் விவசாயிகள் வாங்க வேண்டும் என அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.
சொட்டுநீர்ப் பாசன முறை மூலம் பயிர்களுக்கு கொடுக்கப்படும் உரத்தை நேரடி பாசன நீரிலேயே கலந்து பாய்ச்சும் முறையை ஊக்குவிக்கவும் இந்த குழு அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது. உரங்களை நீரில் கலந்து பயிர்களுக்கு பாய்ச்சும் முறை மூலம் 30-40 % வரையிலான ஊட்டச்சத்துக்கள் பாதுகாக்கப்படுவதுடன், பாசன நீரின் அளவும் 50% மிச்சப்படுத்தப்படுகிறது.
இது குறித்து மத்திய வேளாண் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “விவசாயத்தில் ரசாயனங்கள் மற்றும் யூரியாவின் பயன்பாட்டைக் குறைப்பதற்கான வழிமுறையை வகுக்குமாறு சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
ராசயனங்கள் மற்றும் உரங்களின் அதிகப்படியான பயன்பாட்டை கட்டுப்படுத்த பயிர் வாரியான ஊட்டச்சத்து தேவைகளை உருவாக்கவும் பணிக்குழு பரிந்துரைத்ததாக அவர் கூறினார். மேலும் அனைத்து பயிர்களுக்கும் ஒரே விகிதத்தில் ஊட்டச்சத்துக்கள் தேவையில்லை எனவும் உரத்தேவையின் அடிப்படையில் ஊட்டச்சத்துகளின் பயன்பாடு அந்தப் பயிருக்கு தேவையான ஊட்டசத்துக்கு விகிதத்துடன் ஒத்துப்போக வேண்டும் எனவும், இதுசம்பந்தமாக விவசாயிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
விவசாயத்தில் யூரியா மற்றும் ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைக்கும் வழிமுறையை வழங்குமாறு பணிக்குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மண்வளத்தை காக்க ரசாயன உரங்களை தவிர்ப்பது அவசியமாகிவிட்டது. சிறந்த மானிய மேலாண்மைக்காக யூரியாவை ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியத்தின் கீழ் கொண்டுவர வேண்டும். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியம் ஒவ்வொரு உரத்தின் தரத்திற்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்டு மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும்,
தற்போது விற்கப்படும் யூரியா, அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்ட்ட குறைந்த விலையில் விற்கப்படுகிறது. குறைந்த விலைக்கு விற்கப்படுவதற்குக் காரணம் மீதி தொகை மானியமாக வழங்கப்படுகிறது. இப்படி மானியத்தில் விற்கப்படும் யூரியாவால், விவசாயிகள் அதிக அளவில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது. எனவே அதிகப்படியான யூரியா பயன்பாடு தீங்கை விளைவிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
நன்றி:விகடன்