கிணறு அமைக்க ரூ.3 லட்சம் மானியம் – இந்த தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும்!
விவசாயிகளுக்கு கிணறுகள் அமைத்து மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசனம் செய்ய ஏதுவாக, ரூ.3 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.இதனைப் பெற விவசாயிகள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
100 % மானியம்
இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் பாசன நீர் ஆதாரங்களை புதிதாக உருவாக்கி அதிக பரப்பில் சாகுபடி மேற்கொண்டு விவசாயிகள் அதிக விளைச்சல் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அமைச்சர் அறிவிப்பு
இதன் ஒருபகுதியாக, ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்து 2022-23 ஆம் ஆண்டில் ரூ. 12 கோடி செலவில் மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைத்துத் தரப்படும் என வேளாண் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
200 விவசாயிகள்
இதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் பாசன நீர் வசதி இல்லாத இடங்களில் 200 சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக,அரியலுர், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர்,தேனி ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள நிலத்தடி நீர் பாதுகாப்பாக உள்ள 249 குறுவட்டங்களில் 200 ஆதி திராவிட பழங்குடியின சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
எனவே பயனாளிகள் அந்தந்த மாவட்டத்தின் வேளாண்மை பொறியியல் துறையின் செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் அலுவலர்களை அணுகலாம்.
எந்தெந்த பணிகளுக்கு மானியம்?
இத்திட்டத்தின் கீழ் இடத்திற்கு ஏற்றவாறு, குழாய் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைத்தல், நீரினை இறைப்பதற்கு மின்சார சக்தி மூலம் இயங்கக்கூடிய பம்பு செட்டுகள் நிறுவுதல், பாசன நீரினை வீணாக்காமல் சாகுபடி செய்யப்படும் வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு பாசன நீர் குழாய்கள் நிறுவுதல் மற்றும் நுண்ணீர் பாசன அமைப்புகளை நிறுவுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
மானியம் எவ்வளவு?
90 மீட்டர் ஆழம் உள்ள குழாய் கிணறு அமைப்பதற்கும், 100 மீட்டர் ஆழம் உள்ள ஆழ்துளை கிணறு அமைப்பதற்கும் அதிகபட்சமாக ரூ.3 இலட்சமும், மின்சார சக்தி மூலம் இயங்கக்கூடிய 5 குதிரைத்திறன் கொண்ட பம்பு செட்டுகள் அமைப்பதற்கு ரூ. 75 ஆயிரமும், நீர் விநியோக குழாய்கள் அமைப்பதற்கு ரூ. 20 ஆயிரமும் உச்சவரம்புத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சார சக்தி மூலம் இயங்கக்கூடிய இடங்களுக்கு மின்சார இணைப்புக்கான கட்டமைப்புகள் அமைத்திட ரூ.2.50 இலட்சமும் நிதி வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு
எனவே காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி செயற்பொறியாளர் , 487, அண்ணா சாலை, நந்தனம், சென்னை – 35, வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையம்,பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம் – 631502 அலைபேசி எண் : 044-24352356 கைபேசி எண் : 9003090440 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி:கிருஷி ஜாக்ரன்