17 புதிய பயிர் ரகங்கள்; வேளாண் பல்கலை அறிமுகம் விவசாயிகள் பயன் பெற அழைப்பு
கோவை வேளாண் பல்கலை சார்பில், 17 புதிய பயிர் ரகங்கள் வெளியிடப்பட்டன.
வேளாண் பயிர்கள் -9, தோட்டக்கலை, காய்கறிப் பயிர்கள், -8 என, 17 புதிய ரகங்கள், நான்கு விவசாய தொழில்நுட்பங்கள், மற்றும் ஐந்து பண்ணை எந்திரங்களை, கோவை வேளாண் பல்கலை செயல் துணைவேந்தர் கிருஷ்ணமூர்த்தி நேற்று வெளியிட்டார்.புதிய ரகங்கள் விபரம்:
* நெல் கோ -55:
தமிழகத்தின் சொர்ணாவாரி, கார், குறுவை மற்றும் நவரை பருவங்களில் வளரக்கூடிய குறுகிய கால (115 நாள்) ரகம். எக்டேருக்கு, 6,050 கிலோ மகசூல் கிடைக்கும். மத்திய சன்ன அரிசி ரகம்.
நெல் ஏ.டி.டீ.57:
கார், குறுவை, நவரை மற்றும் கோடை பருவத்துக்கு ஏற்ற ரகம். குறுகிய கால (115 நாள்) ரகம். எக்டேருக்கு, 6,500 கிலோ மகசூல் கிடைக்கும். கருகல் நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. சன்ன அரிசி ரகம்.
* நெல் டி.கே.எம்- 15
: இது வறட்சி, நீர்பற்றாக்குறை சூழ்நிலையில் வளரக்கூடியது. வடகிழக்கு பருவமழை காலத்தில், செப்., அக்., மாதங்களில் விதைக்கலாம். குறுகிய கால (115 – 120 நாள்) ரகம். எக்டேருக்கு, 5,800 கிலோ மகசூல் கிடைக்கும்.
* நெல் டி.ஆர்.ஒய்- 5:
தமிழகத்தின் குறுவை மற்றும் நவரை பருவங்களில் வளரக்கூடியது. குறுகிய கால (115 – 120 நாள்) ரகம். மத்திய சன்ன அரிசி ரகம். உவர் நிலங்களுக்கு ஏற்றது. எக்டேருக்கு, 5,100 கிலோ மகசூல் கிடைக்கும்.
* உளுந்து ஏ.டீ.டி-7:
இந்த ரகம் தரிசு நிலத்துக்கு ஏற்றது. 60 – 70 நாளில் முதிர்ச்சி அடைந்து, எக்டேருக்கு, 724 கிலோ என்ற அளவில் மகசூல் கொடுக்கும்.
* பச்சை பயறு, வி.பி.என் 5:
கரீப்(ஜூன் – ஜூலை), ரபி(செப்., – அக்.,) மற்றும் கோடை(ஜன., – பிப்.,) ஆகிய பருவங்களுக்கு ஏற்றது. 70 – 75 நாளில் முதிர்ச்சி அடைந்து, எக்டேருக்கு, 870 கிலோ என்ற அளவில் மகசூல் கொடுக்கும்.
* நிலக்கடலை வி.ஆர்.ஐ 9:
சித்திரை, ஆடி, ஐப்பசி ஆகிய பருவங்களுக்கு ஏற்றது. மார்கழியில் இறவை பயிராக பயிரிடலாம். இது குறுகிய கால ரகம். 95 – 110 நாள் வயதுடையது. எக்டேருக்கு, 2,500 கிலோ மகசூல் கொடுக்கும். இலைப்புள்ளி, துரு நோய்க்கு மிதமான எதிர்ப்பு திறன் கொண்டது.
* நிலக்கடலை வி.ஆர்.ஐ 10:
சித்திரை, ஆடி, ஐப்பசி ஆகிய பருவங்களுக்கு ஏற்றது. மார்கழியில் இறவை பயிராக பயிரிடலாம். இது குறுகிய கால ரகம். எக்டேருக்கு, 2,530 கிலோ மகசூல் கொடுக்கும். எண்ணெய் சத்து, 45 சதவீதம் உடையது. இலைப்புள்ளி, துரு நோய்க்கு மிதமான எதிர்ப்பு திறன் கொண்டது.
* கரும்பு கோ.ஜி7
நல்ல மண் வளத்தில், சராசரியாக, எக்டேருக்கு, 134 டன்; உவர் நிலத்தில், எக்டேருக்கு, 126 டன் மகசூல் கிடைக்கும். சிவப்பு அழுகல் நோய்க்கு மிதமான எதிர்ப்பு திறன் கொண்டது.
* வாழை கோ3
கற்பூரவள்ளி மரபு கலப்பின சேர்க்கையால் உருவாக்கப்பட்டது. வயது, 13 மாதங்கள். வாழைக்குலையின் எடை சராசரியாக, 12 கிலோ இருக்கும். இது வேர் நுண்புழு தாக்குதலை தாங்கி வளரக்கூடியது.
* பலா பி.கே.எம்-3:
மார்ச் – மே, நவ., – டிச., என இரு அறுவடைகள் செய்யலாம். ஒரு பழம், 21 கிலோ எடை இருக்கும். ஒரு மரத்தில், 2.3 டன் பழங்கள் வரை காய்க்கும். மரத்துக்கு, 106 பழங்கள் கிடைக்கும். எக்டேருக்கு, 156 மரங்கள் நடலாம்.
* நாவல் பி.கே.எம் 1:
வறண்ட பயன்படாத நிலங்களில், பயிர் செய்யலாம். ஒரு பழத்தின் எடை, 17 கிராம். மரத்துக்கு, 82 கிலோ மகசூல் கிடைக்கும். மருத்துவ குணங்களான ஆண்டி ஆக்சிடண்ட், முக்கிய தாதுக்கள் உள்ளன.
* கத்தரி எம்.டி.யூ -2:
இந்த ரகம், 140 நாள் வயதுடையது. ஜூன் – செப்., மற்றும் நவ., – பிப்., ஆகிய மாதங்களில் பயிரிட ஏற்றது. சராசரியாக, எக்டேருக்கு, 31 டன் மகசல் கொடுக்கும். தண்டு துளைப்பான், பூஞ்ஞாண நோய்க்கு மிதமான எதிர்ப்பு திறன் கொண்டது.
* அவரை கோ 15
கொம்பில் வளரக்கூடிய ரகம். செடிக்கு, 14 கிலோ மகசூல், கொடுக்கும். பச்சை அவரைகள் நட்ட, 70வது நாள் முதல் காய்க்கத் துவங்கி, 240 நாட்கள் வரை காய்க்கும். 25 அறுவடைகள் செய்யலாம்.
* சேனைக்கிழங்கு, கோ 1:
சரளை மண்ணுக்கு ஏற்றது. பிப்., மற்றும் மார்ச் மாதங்களில் நடவு செய்யலாம். எக்டேருக்கு, 50 டன் மகசூல் கிடைக்கும். ரகம், 240 நாட்கள் வயதுடையது.
* மஞ்சள் பி.எஸ்.ஆர் 3:
மே முதல், ஜூன் மாதங்களில் நடவு செய்யலாம். மஞ்சள் பயிரிடும் அனைத்து மாவட்டங்களுக்கும் ஏற்றது. இலைப்புள்ளி, இலை கருகல் நோய்க்கு மிதமான எதிர்ப்பு திறன் கொண்டது. இது, 240 – 250 நாட்கள் வயதுடையது.
* கொத்தமல்லி கோ 5:
கரீப் மற்றும் ரபி பருவங்களில், பயிர் செய்யலாம். இலை மகசூல், 35 வது நாட்கள் முதல் அறுவடை செய்யலாம். எக்டேருக்கு, 4.7 டன் மகசூல் கிடைக்கும்.
‘100 ஆண்டில் 865 ரகங்கள்
‘செயல் துணை வேந்தர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,”தமிழ்நாடு வேளாண் பல்கலை, 100 ஆண்டுகளில், 865 புதிய பயிர் ரகங்களை வெளியிட்டுள்ளது. தற்போது, 17 புதிய ரகங்கள், வெவ்வேறு வானிலை மண்டலங்களுக்கு ஏற்றவாறு வெளியிடப்பட்டுள்ளன. விவசாயிகள் இப்புதிய பயிர் ரகங்களை பயிரிட்டு நன்மை பெற வேண்டும்,” என்றார்.
நன்றி:தினமலர்
நிலக்கடலை தேவை