இயற்கை உரமாகும் பார்த்தீனியம்!
விவசாய நிலங்களில் வளரும் களைச்செடிகளை முற்றிலும் அழிப்பது விவசாயிகளுக்கு எப்போதும் சவாலான பணியாகவே உள்ளது. குறிப்பாக விஷச் செடியாக அடையாளம் காணப்படும் பார்த்தீனியம் எங்கும் பரவிக் காணப்படுகிறது. விவசாய நிலங்களில் மட்டுமல்ல; வனப்பகுதிகளில் கூட இவற்றின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது.
இதன் பூந்துகள்கள் காற்றில் பரவி, மனிதர்களுக்கு ஒவ்வாமை, ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன. தவிர, மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் தோல் நோய்களையும் இச்செடிகள் ஏற்படுத்துகின்றன. இதனை உண்ணும் கால்நடைகளின் ஜீரண உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. இவற்றை வெறும் கைகளால் பறிப்பதோ, அதன் பூக்களை நுகர்வதோ கூடாது.
பார்த்தீனியம் விதைகளின் மேல் ரசாயனப் படலம் படர்ந்திருப்பதால் இதன் விதைகள் 100 சதவீதம் முளைப்புத்திறன் கொண்டுள்ளன. மேலும் இவை எந்த வகை மண்ணிலும் செழித்து வளரும் இயல்புடையவை.
இதன் விதைகள் எத்தனை ஆண்டுகளானாலும் செயலற்றுக் கிடக்கும். தேவையான சூரிய ஒளி, தண்ணீர், காற்று, ஈரப்பதம் கிடைத்ததும் இவை முளைத்து வளர்ந்து சுற்றுச்சூழலைப் பாதிக்கும் தன்மையுடையது. எனவே, இவற்றை அழிப்பது முடியாத காரியமாக உள்ளது.
சுற்றுச்சூழலுக்கும், சமூகத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பார்த்தீனியம் செடிகளை அழித்து அவற்றை இயற்கை உரமாக்க முடியும் என்கிறார், ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியைச் சேர்ந்த ஜெயம் பிராணிகள் நல அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் கே.வி.கோவிந்தராஜ்.
பவானி அருகே உள்ள ஆலத்தூர் கால்நடை மருத்துவக் கிளை நிலையத்தில் கால்நடை ஆய்வாளராகப் பணிபுரிந்து கடந்த 2004 -ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்ற கே.வி.கோவிந்தராஜ், தனது ஓய்வு காலத்தைப் பயனுள்ளதாக்கத் திட்டமிட்டு, பார்த்தீனியத்தை இயற்கை உரமாக மாற்றிடும் முறைகளை சோதனை முறையில் செய்து வெற்றி கண்டிருக்கிறார்.
தனது சோதனைகள் குறித்து கவுந்தப்பாடியைச் சுற்றியுள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நேரடி செயல் முறை விளக்கம் அளித்து, பார்த்தீனியத்தை அகற்றும் முறையைக் கற்றுக் கொடுத்து வருகிறார்.
இதன்மூலம் இரண்டு நன்மைகள் ஏற்படுகின்றன. பார்த்தீனிய விஷச் செடிகளின் பெருக்கம் கட்டுப்படுத்தப்படுவதுடன், அவற்றை இயற்கை உரமாக்குவதன் மூலம் விவசாயிகளுக்கு நன்மை ஏற்படுவதாகக் கூறுகிறார்
கோவிந்தராஜ். மேலும் அவர் கூறியதாவது:
“”விவசாய நிலத்தில் 6 அடி நீளம், 4 அடி அகலம், 4 அடி ஆழத்தில் குழியைத் தோண்டிக் கொள்ள வேண்டும். இந்தக் குழிகளில் வேருடன் பிடுங்கிய பார்த்தீனியம் செடிகளை இரண்டடி உயரத்துக்கு நிரப்பி, மிதியடி அணிந்த கால்களால் நன்கு மிதித்து, கரைத்து வைத்துள்ள ஒரு வாளி சாணத்தைத் தெளிக்க வேண்டும். அதன் மேல் 3 அல்லது 4 இன்ச் அளவுக்கு மண்ணைப் போட்டு பரப்பிவிட வேண்டும். இதேபோல, 4 அல்லது 5 அடுக்குகள் பார்த்தீனியம் செடிகள், சாணம், மண்ணைப் போட்டு மேடாக்கலாம். நில மட்டத்துக்கு மேல் 2 அடி உயரத்துக்கு திட்டுப் போல ஆக்கிக் கொள்ளலாம். ஓரிரு மாதங்களில் புதைக்கப்பட்ட பார்த்தீனியம் செடிகள் மக்கி, மிகச் சிறந்த இயற்கை உரமாக மாறி விடும்.
பார்த்தீனியம் செடிகள் காயாகி, விதையாகும் முன் பிடுங்கி புதைக்க வேண்டும். அதில் காய், விதை தோன்றி விட்டால் அந்தச் செடிகளை மட்டும் தனிமைப்படுத்தி தீயிட்டு விதைகளையும் காய்களையும் எரித்து, அழித்துவிட வேண்டும்.
விதைகள் நிறைந்த பார்த்தீனியம் செடிகளைப் புதைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் எத்தனை காலம் ஆனாலும் இதன் விதைகள் விதைப்புத் திறன்மிக்கதாகவே இருக்கும். அதனை இயற்கை உரமாகப் பயன்படுத்தும்போது, பூமியில் புதைக்கப்பட்ட விதைகள் மீண்டும் முளைக்கும் அபாயம் உள்ளதால், இதில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி, பார்த்தீனிய விதைகளை அழித்து விட வேண்டும்.
பார்த்தீனியம் செடிகளை இயற்கை உரமாக்கும்போது அதில் கூடுதலான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் சத்துக்களும் கிடைக்கின்றன. பயிர்களுக்குத் தேவையான நுண்ணூட்டச் சத்துகளும் அதிக அளவில் உள்ளதால், பயிர்களின் வளர்ச்சித் திறனும், உற்பத்தித் திறனும் பெருகுகின்றன.
தென்னை, மா, பலா, எலுமிச்சை, வாழைத் தோப்புகளிலும் இடத்துக்கு தகுந்தாற்போல இந்த பார்த்தீனியச் செடிகள், இலை தழைகள், சாணிக் குப்பைகளை போட்டு வைப்பதன் மூலமாகவும் ஒரே மாதத்தில் இயற்கை உரத்தைப் பெற முடியும்.
விவசாயிகள் இந்த முறையைச் செயல்படுத்தினால் விரைவில் பார்த்தீனியம் செடிகளின் பெருக்கத்தை அழித்துவிட இயலும். தற்போது, 25-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும், பல பள்ளிகளிலும், கல்லூரிகளில் நாட்டுநலப்பணித் திட்ட முகாம்களிலும் இதன் செயல்முறை விளக்கத்தைச் செய்து காட்டியுள்ளேன்.
இந்த மாற்றத்தை நான் மட்டுமே ஏற்படுத்தி விட முடியாது. ஒவ்வொரு ஊராட்சித் தலைவரும் தங்களின் கிராமங்களில் செயல்படுத்தப்படும் நூறுநாள் வேலை உறுதியளிப்புத் திட்ட பணியாளர்கள் மூலம் உரக்குழிகளை வெட்டி, இந்த முறையைப் பயன்படுத்தி பார்த்தீனியத்தை அழித்து, இயற்கை உரத்தை உற்பத்தி செய்யலாம்” என்றார்.
நன்றி:தினமணி
ஒவ்வொரு விவசாயிகளும் இதனைச் செய்தால் இரண்டே ஆண்டுகளில் பார்த்தீனீயமில்லா பாரதத்தைப் பார்க்கலாம் சுற்றுச் சூழல் காக்கலாம்