பூச்சி இனங்களின் அழிவுக்கு காரணமான தெரு விளக்குகள் – ஆய்வாளர்கள் சொல்லும் மாற்று வழி
சமீப ஆண்டுகளில் ஒளி மாசுபாட்டினால் கவலைக்குரிய விதத்தில் பூச்சி இனம் அழிந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், செயற்கை தெரு விளக்குகள் இரவாடும் அந்துப் பூச்சிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும், அதன் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவீன LED தெருவிளக்குகள் இதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதேபோன்று பருவநிலை மாற்றம், வாழ்விடங்கள் சூரையாடப்படுவது, பூச்சிக் கொல்லி ஆகியவற்றால் பூச்சிகளின் எண்ணிக்கை குறைவதற்கான கண்கூடான ஆதாரங்கள் உள்ளன.
இருப்பினும் இதற்கான ஒட்டுமொத்த காரணத்தை சொல்வது சற்று கடினமானதுதான். காடுகளை அழிப்பது, சதுப்பு நிலங்களை அழிப்பது, தேவைக்கு அதிகமான பூச்சிக் கொல்லி பயன்பாடு, பருவநிலைமாற்றம், ஆறுகள் மாசுபடுதல் ஆகியவையும் இதற்கு காரணம்.
இரவுநேர விளக்குகள் பூச்சிகளின் எண்ணிக்கையை குறைக்கிறது என்று தெரிந்தாலும், அதன் தீவிரம் குறித்து இன்னும் மதிப்பீடு செய்யவில்லை.
சயின்ஸ் அட்வான்ஸஸ்
என்ற சஞ்சீகையில் பிரசுரமான தங்களின் ஆய்வில் ஒளி மாசு
பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கான காரணமாக உள்ளது என்பதற்கான ஆதாரங்களை குறிப்பிட்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பூச்சிகள் குறைந்தால் அதனை நம்பியிருக்கும் பறவைகள் மற்றும் பிற உயிரினங்களையும் அது பாதிக்கும்.
பூச்சிகள் அழிந்துவருவதை தடுக்க நம்மால் இயன்ற நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என இந்த அய்வின் தலைவர் டக்ளஸ் பாயிஸ் தெரிவித்தார்.
தெரு விளக்குகள் இரவாடும் அந்துப்பூச்சிகள் முட்டையிடுவதை பாதிக்கின்றன என்றும், அவை வெளவால் போன்ற விலங்குகளிடம் எளிதில் அகப்பட உதவுகின்றன என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தெரு விளக்குகள்
பட மூலாதாரம்,DOUGLAS BOYES
மறுபுறம் LED போன்ற தெரு விளக்குகளின் கீழ் பிறந்த பூச்சிகள் தங்களது உணவு பழக்கத்தை அதற்கேற்றது போல மாற்றி கொள்கின்றன.
தீர்வுகள் என்ன?
வெளிச்சம் அதிகமான நேரத்தில் தெரு விளக்கின் ஒளியை குறைப்பது, தீங்கு ஏற்படுத்தும் அலைவீச்சை கட்டுப்படுத்தும் நிற வடிப்பான்களை பயன்படுத்துவது போன்ற நடைமுறை தீர்வுகளையும் ஆய்வாளர்கள் முன் வைக்கின்றனர்.
இங்கிலாந்தில் உள்ள நியூ காசில் பல்கலைக்கழகத்தின் பட்டாம்பூச்சி பாதுகாப்பு தொண்டு அமைப்பு வல்லுநர்கள் மற்றும் பிரிட்டனின் சூழலியல் மற்றும் நீர்வள இயலுக்கான மையம் ஆகியவை தெற்கு இங்கிலாந்து பகுதியில் இரவாடும் அந்துப்பூச்சி மற்றும் முள் எலிகள் குறித்த கணக்கெடுப்பை நடத்தின.
இதில் தெரு விளக்குகள் கொண்ட பகுதிகள் தெரு விளக்குகள் அற்ற பகுதிகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டன. இதில் தெரு விளக்குகள் கொண்ட பகுதிகளில் பூச்சிகள் பாதி எண்ணிக்கையிலேயே இருந்தத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இரண்டாவது சோதனையில் எல்இடி விளக்குகள் வைக்கப்பட்டு சோதிக்கப்பட்டன. அந்த பகுதியிலும் பூச்சிகள் கணிசமாக குறைந்து காணப்பட்டன.
சில பூச்சி இனங்கள் கணிசமாக குறைந்து வருவது குறித்து விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
2019ஆம் ஆண்டு மேற்கொண்ட ஒரு அறிவியல் ஆய்வில் 40 சதவீத பூச்சி இனங்கள் உலக அளவில் பெரும் அழிவை சந்தித்து வருவதாக தெரியவந்தது.
தேனீக்கள், எறும்புகள் மற்றும் விட்டில் பூச்சிகள் போன்றவை பாலூட்டிகள் பறவைகள் மற்றும் ஊர்வன போன்றவற்றைக் காட்டிலும் எட்டு மடங்கு வேகமாக மறைந்து வருவதாக அய்வில் தெரியவந்தது. ஈக்கள், கரப்பான் பூச்சி போன்ற பிற பூச்சிகள் அதிகரிப்பதும் அந்த ஆய்வில் தெரியவந்தது.
இம்மாதிரியான பூச்சி இனங்களின் அழிவு சுற்றுச்சூழல் அமைப்பில் பெரும் விளைவை ஏற்படுத்தும். பூச்சிகள் பறவைகள், நிலம் நீர் இரண்டிலும் வாழும் விலங்குகள், வெளவால்கள், ஊர்வன ஆகியவற்றுக்கு உணவாக உள்ளன. மேலும் தாவரங்களும் மகரந்த சேர்க்கைக்கு பூச்சிகளை நம்பியுள்ளன.
நன்றி:பிபிசி தமிழ்