சின்ன வெங்காயத்திற்கான விலை முன்னறிவிப்பு
இந்தியாவிலேயே, தமிழ்நாடு , சின்ன வெங்காயத்தின் முக்கிய உற்பத்தியாளராகவும், நுகர்வோராகவும் திகழ்கிறது. திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், தேனி, மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில், சின்ன வெங்காயத்தை அதிகளவு பயிரிடுகின்றனர். தமிழ்நாட்டில், சின்னவெங்காயம் முக்கியமாக, தை, வைகாசி மற்றும் புரட்டாசி பட்டம் ஆகிய மூன்று பட்டங்களில் பயரிடப்பட்டு, சந்தையில் ஆண்டு முழுவதும் கிடைக்கும் படி சேமிக்கப்படுகிறது.
இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு, தமிழகத்திலிருந்து சின்ன வெங்காயம் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.. திருச்சி மற்றும் திண்டுக்கல் சந்தைகளுக்கு, தாராபுரம், பல்லடம் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்து, சின்ன வெங்காயம் வரத்து உள்ளது. தற்போது உற்பத்தியாளர்கள், விலை உயரும் என்ற நம்பிக்கையில், சேமித்து வைத்துள்ளனர். வர்த்தக மூலங்களின் படி, இருப்பு நிலை மற்றும் மைசூர் வரத்து துவங்கும் வரை, வெங்காயத்தின் விலையானது தற்போதய சந்தை விலையை ஒட்டியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில், இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின், விலை முன்னறிவிப்பு திட்டம், கடந்த 22 ஆண்டுகளாக திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்ன வெங்காயத்தின் விலை மற்றும் சின்ன வெங்காயம் பயிரிடப்படும், முக்கிய பகுதிகளில் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. விலை மற்றும் சந்தை ஆய்வுகளின்படி, நல்ல தரமான சின்ன வெங்காயத்தின் விலை, செப்டம்பர் மாதம் இறுதிவரை, கிலோவிற்கு ரூபாய் 32 முதல் 34 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்டை மாநிலங்களின் பருவமழை மற்றும் வரத்து பொறுத்து, வெங்காயத்தின் விலையில் மாற்றங்கள் இருக்கும். எனவே, விவசாயிகள், மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில், விதைப்பு முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும்,
உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம்,
வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர், தொலைபேசி – 0422 2431405,
தொழில்நுட்ப விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்
பேராசிரியர் மற்றும் தலைவர்,
காய்கறிப் பயிர்கள் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர், தொலைபேசி எண்- 0422 6611374
நன்றி: வேளாண்மை துறை