விளைச்சலை அதிகரிக்கும் பயிர் பூஸ்டர்கள்
பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் வறட்சி, அதிக வெப்பநிலை, நிலத்தடி நீரின் உப்புத்தன்மை அதிகரிப்பு போன்றவற்றால் பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூல் குறைந்து வருகிறது. மாறிவரும் கால சூழ்நிலைக்கேற்ப விளைச்சலை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர்.
விளைச்சலை அதிகரித்து வருமானத்தை அதிகரிக்க கோவை வேளாண் பல்கலை பயிர் வினையியல் துறையின் மூலம் பயிர் பூஸ்டர்கள் பரிந்துரைக்கப் படுகின்றன. இவை குறைந்த செலவில் நல்ல விளைச்சல் தருவது நிரூபிக்கப்பட்டுள்ளது.
பயிர்களின் முக்கியமான வளர்ச்சி கால கட்டங்களில் திசுக்களில் ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி ஊக்கிகளின் அளவை நிலைநிறுத்தி பயிர் உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது இந்த டிஎன்ஏயு பயிர் பூஸ்டர்கள். பயிர் வினையியல் துறையானது தென்னை, பயறு வகைகள், நிலக் கடலை, பருத்தி, மக்காச்சோளம் மற்றும் கரும்பு ஆகியவற்றிற்கான பயிர் பூஸ்டர்களை பரிந்துரை செய்கிறது.
தென்னை விவசாயிகளுக்கு குறைந்த செலவில் தென்னை டானிக் அதிக பலன் தருகிறது. ஆண்டுக்கு 200 மில்லி வீதம் டானிக்கை 6 மாத இடைவெளியில் தென்னைக்கு வேர் மூலம் கொடுக்க வேண்டும்.
இதனால் தென்னையில் பச்சையம் உற்பத்தி அதிகரித்து ஒளிச்சேர்க்கையின் திறன் கூடுகிறது. பாளைகளின் எண்ணிக்கை அதிகரித்து, குரும்பை கொட்டுதல் குறைகிறது. காய்கள் பெரிதாகி பருப்பு எடை கூடுகிறது. 20 சதவீதம் வரை விளைச்சல் அதிகரிப்பதோடு பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா தென்னை விவசாயிகளும் இதன் மூலம் பல ஆண்டுகளாக பலன் அடைந்து வருகின்றனர். பயறு வகைப்பயிர்கள், நிலக்கடலை, பருத்தி, மக்காச்சோளம் மற்றும் கரும்பு பயிர்களுக்கான பூஸ்டர்களின் பரிந்துரைக்கப்பட்ட அளவை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீர், ஒட்டும் திரவத்துடன் கலந்து இலைவழி தெளிக்க வேண்டும். இதனால் தாவரத்தின் வறட்சியைத் தாங்கும் திறன் அதிகரிப்பதோடு 15 – 20 சதவீத விளைச்சல் அதிகரிக்கும். பயறு வகைப் பயிர்களுக்கு டிஎன்ஏயு பயறு ஒன்டர் பூஸ்டரை ஏக்கருக்கு 2 கிலோ என்ற அளவில் பூக்கும் பருவத்தில் இலைவழி தெளித்தால் பூக்கள் உதிர்வதை கட்டுப்படுத்தலாம்.
நிலக்கடலைக்கு டிஎன்ஏயு நிலக்கடலை ரிச் பூஸ்டரை பூக்கும் போதும் காய் பிடிக்கும் போதும் ஏக்கருக்கு தலா 2 கிலோ வீதம் இலைவழியாகத் தெளிக்க வேண்டும். பூ பிடிக்கும் திறன் கூடுவதோடு பொக்குக் கடலைகள் உருவாவதும் குறைந்து 20 சதவீத மகசூல் அதிகரிக்கிறது.
பருத்தி பிளஸ் பூஸ்டரை பருத்தியின் பூக்கும் மற்றும் காய்பிடிக்கும் பருவங்களில் தலா 2.5 கிலோ என்ற அளவில் ஏக்கருக்கு 5 கிலோ வீதம் இலைவழியாகத் தெளிக்க வேண்டும். பூ மற்றும் சப்பைகள் உதிர்வது குறைந்து காய்கள் முழுமையாக வெடித்து சீரான அறுவடை கிடைக்கும். 15 சதவீத மகசூல் அதிகரிக்கும்.
மக்காச்சோளத்தில் குறைந்த செலவில் அதிக விளைச்சல் பெற டிஎன்ஏயு மக்காச்சோள மேக்சிம் பூஸ்டரை பருவத்திற்கு தலா 3 கிலோ வீதம் ஆண் மஞ்சரி மற்றும் மணி உருவாகும் போது இலைவழியாகத் தெளிக்க வேண்டும். இத்தெளிப்பானது மக்காச்சோளத்தில் மணி பிடிக்கும் திறன் அதிகரித்து 20 சதவீதம் மகசூல் கூடுகிறது.
கரும்பு நட்ட 45 வது நாளில் ஏக்கருக்கு ஒரு கிலோ, 60, 75 வது நாட்களில் ஒன்றரை மற்றும் 2 கிலோ டிஎன்ஏயு கரும்பு பூஸ்டரை இலைவழித் தெளிக்க வேண்டும். கரும்பில் இடைக்கணுக்களின் நீளம் கூடுவதால் கரும்பின் வளர்ச்சி, எடை மற்றும் சர்க்கரையின் அளவு அதிகரித்து கரும்பு சாகுபடியில் அதிக லாபம் பெறலாம்.
– பாபு ராஜேந்திர பிரசாத்
உதவி பேராசிரியர்
கலாராணி, துறைத் தலைவர்
பயிர் வினையியல் துறை
வேளாண் பல்கலை
கோவை – 641 003.
0422 – 661 1243
நன்றி:தினமலர்