தோட்டக்கலை பயிர்களை தாக்கும் நூற்புழுக்கள்
தோட்டக்கலைப் பயிர்களில் நுாற்புழுக்கள் தாக்குதலால் 30 – 40 சதவீத மகசூல் இழப்பு ஏற்படுகிறது. விளைச்சல் குறைவு மட்டுமின்றி விளை பொருட்களின் தரமும் குறைவதால் விலையும் குறைந்து நஷ்டம் ஏற்படுகிறது. புழுக்கள் தாக்கப்பட்ட செடிகள் உயரத்திலும் பருமனிலும் குறைந்து பக்க கிளைகளின் எண்ணிக்கையும் குறைகிறது. இடைக்கணுவின் நீளமும் குறைகிறது. இலைகள் பழுப்புநிறமாக மாறி ஓரம் சிவப்பாகி மேற்புறம் மடிகிறது. செடிகளுக்கு மேலே கிளைகள் ஒன்று கூடி காலிபிளவர் போன்ற அமைப்பு உருவாகிறது. செடிகளில் இந்த அமைப்பு இருந்தால் அதன் வேரையும் பரிசோதிக்க வேண்டும். சல்லி வேர்களற்ற கட்டை வேர்கள் மற்றும் பாசி மணி போன்ற வேர்முடிச்சுகள் தென்படும். நுாற்புழுக்களின் தாக்குதலுக்குப்பிறகு பூஞ்சாண தாக்குதலால் வேர்கள் அழுகி விடும். வந்தபின் காப்பதுடன் வருமுன் காப்பது மிக அவசியம். கடைசி உழவின் போது ஏக்கருக்கு 40 – 60 கிலோ வேப்பம் புண்ணாக்கு, ஆமணக்கு புண்ணாக்கு கலந்து உழ வேண்டும். கரும்பாலை கழிவுகளை பயன்படுத்தியும் உழலாம். இவை வெப்பமும் அமிலமுமாக மண்ணின் தன்மையை மாற்றி நூற்புழுக்கள் வாழ முடியாத சூழலை ஏற்படுத்தி மண் வளத்தை அதிகரிக்கிறது. ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோ டெர்மா விரிடி சேர்க்க வேண்டும். அல்லது 10 கிராம் சூடோமோனஸ் அல்லது வேம்பு விதை பவுடர் கலந்து விதை நேர்த்தி செய்யலாம். நோய் வந்த பின் ஒரு மரத்திற்கு 40 கிராம் என்ற அளவில் மரத்தை சுற்றி குழி எடுத்து கார்டாப் ஹைட்ரோகுளோரைடு இடலாம். நூற்புழுக்கள் தண்ணீர் மூலம் பரவுவதால், அவை தாக்கிய தொட்டிகளில் சொட்டு நீர் பாசனம் அமைத்திருந்தால் சொட்டுநீரை தவிர்க்க வேண்டும். வட்டப்பாத்திகள் மூலம் தண்ணீர் ஊற்றலாம். –
செல்வி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார் உதவி பேராசிரியர் வேளாண் அறிவியல் மையம் மதுரை. 79043 10808.
நன்றி:தினமலர்