கரோனாவினால் உலகச் சந்தையில் முருங்கை இலைகளுக்கு தேவை அதிகரிப்பு: உற்பத்தியை அதிகரிக்க தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தல்
கரோனா பாதிப்பினால் உலகச் சந்தையில் முருங்கை இலைகளுக்கு அதிக விலை கிடைக்கத் தொடங்கி உள்ளது. எனவே அடர்நடவு மூலம் அதிக உற்பத்தி செய்து விவசாயிகள் பலனடையலாம் என்று நவீன தொழில்நுட்பப் பயிற்சி முகாமில் விளக்கப்பட்டது. நவீன தொழில்நுட்ப முருங்கை சாகுபடி குறித்த பயிற்சி முகாம் மயிலாடும் பாறையில் நடைபெற்றது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி முதல்வர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.
மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பாண்டியன், தோட்டக்கலைத்துறை காய்கறி விதை இயக்குனர் கீதாராணி, காய்கறி துறைத் தலைவர் ஜானவி, தோட்டக்கலைக் கல்லூரி பேராசிரியர் நாகேஸ்வரி, உதவிப் பேராசிரியர் பாலா, கடமலைக்குண்டு வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ராஜபிரியதர்ஷன் ஆகியோர் தொழில்நுட்ப விளக்கம் அளித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது: உலகளவில் மக்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முருங்கை இலை முன்னிலையில் உள்ளது. இரும்பு உள்ளிட்ட 72 தாதுக்கள் இதில் அடங்கி உள்ளன. கரோனாவிற்கு பிறகு இதன் முக்கியத்துவத்தை பலரும் உணரத் துவங்கி விட்டனர். இதனால் இதன் இலைகளுக்கு உலகச் சந்தையில் அதிக விலை கிடைக்கத் துவங்கி உள்ளது. எனவே விதை நேர்த்தி செய்வதுடன் அசோக்பைரில்லம் உள்ளிட்ட உயிர் உரங்களை உரிய அளவில் பயன்படுத்தலாம். ரசாயன உரங்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.
பொதுவாக எட்டுக்கு எட்டு அடி இடைவெளியில் இவற்றை வளர்ப்பது வழக்கம். இலை உற்பத்தியைப் பொறுத்தளவில் அடர்நடவு முக்கியம். எனவே ஒன்றரைக்கு ஒன்றரை அடியில் செடிகளை நடவு செய்ய வேண்டும். 45 நாட்களுக்கு ஒருமுறை இலைகளை பறித்து விற்பனை செய்யலாம் ரத்தச் சோகை உள்ளிட்டவற்றிற்கு முருங்கை இலை சிறந்தது. இலைகள் கிலோ ரூ.10-க்கும், உலர வைக்கப்பட்ட இலை ரூ.70-க்கும் விலை போகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
கடமலைக்குண்டு தோட்டக்கலை அலுவலர் அன்பழகன் வட்டார துணை அலுவலர்கள் கோவிந்தசாமி, வெள்ளைச்சாமி, வட்டார ஆட்மா திட்ட தலைவர் வேல்முருகன், வேளாண்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மற்றும் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது.
நன்றி:இந்து தமிழ்