கால்நடை வளர்ப்பும் வேளாண் காடுகளும்
கால்நடை வளர்ப்பிலும் உற்பத்திப் பெருக்கத்திலும் பசுந்தீவனம் முக்கிய இடம் பெறுகிறது. ஆனால் மேய்ச்சல் தரைகளின் பரப்பளவும் தரமும் மக்கள் தொகைப் பெருக்கத்தால் குறைந்து வருகிறது. பசுந்தீவனத் தட்டுப்பாட்டால் கால்நடைகளுக்கு ஊட்டச் சத்துக் குறைபாடு ஏற்பட்டு, அவற்றின் உற்பத்தியும் குறைகிறது.
பசுந்தீவனப் பற்றாக்குறையை போக்க வீரிய ஒட்டுத் தீவனப் புற்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும் குறைந்த பரப்பு, தண்ணீர்ப் பற்றாக்குறையால் இவற்றை விளைவிக்க விவசாயிகள் ஆர்வம் காட்டுவதில்லை. இந்த சூழ்நிலைகளில் கால்நடை வளர்ப்போருக்கு உதவுவது வேளாண் காடுகளே.பசுந்தீவன சாகுபடிக்காக நிலத்தை ஒதுக்காமல் வேளாண்மையுடன் சேர்த்து பசுந்தீவனம் தயாரிக்கலாம். மர இலைகளும் பசுந்தீவனமே. பசுந்தீவன மரங்களையும் தீவனப் புற்களையும் வேளாண் பயிர்களுடன் இணைக்கும் ஒரு தொழில்நுட்பமே வேளாண் காடுகள்.
உணவுப் பயிர்களுடன், மரங்கள், புல் மற்றும் இதர கால்நடைத் தீவன வகைகளை இணைத்து பயிர் செய்யலாம். இம்முறையில் தீவன மரங்களைப் பயிர் செய்து தீவனப் பற்றாக்குறையை சமாளிக்கலாம். கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பாமல் தழைத் தீவனங்களை அறுவடை செய்து கொட்டிலிலேயே கொடுக்கலாம். சாணத்தைக் கொட்டிலிலிருந்து சேகரித்து பயிருக்கு எருவாக அளித்தால் மண் வளம் குறையாது; ரசாயன உரமும் குறையும்.
நஞ்சையில் வேளாண் மரக்காடுகள்
நீர்வசதி இருக்கக் கூடிய இடங்களில், என்.பி. 21, கோ- 4 புற்களுடன் அகத்தி, கிளரிசிடியா, சூபாபுல், மரத்துவரை மரங்களையும் நடலாம். 13 செண்டு நஞ்சை நிலத்தில் வீரிய ஒட்டுப் புற்களுடன் ஒன்று ஒன்று மீட்டர் இடைவெளியில் 550 தீவன மரங்களை நட்டால் நாளொன்றுக்கு 20 முதல் 25 கிலோ பசும் புல்லும் 12 முதல் 14 கிலோ மர இலையையும் பெறலாம். தினமும் 8 லிட்டர் பால் கொடுக்கும் பசுவிற்கு இது சரியாக இருக்கும்.
தென்னையில் ஊடுபயிராக தீவனம்
வளர்ந்த தென்னையின் வேர் பக்கவாட்டில் இரண்டு மீட்டர் வரையும், கீழ் நோக்கி ஒரு மீட்டர் வரையும் செல்கின்றன. எனவே இரு தென்னை மரங்களுக்கு இடையே ஏறத்தாழ 4 மீட்டர் நிலப்பரப்பு வீணாக்கப்படுகிறது. அந்த பகுதியில் என்.பி. 21, கினியா புல், கோ – 4 புற்களையும் டெஸ்மோடியம், கலப்பகோனியம், காராமணி, சிரட்ரோ பயறுவகைத் தீவனங்களையும் பயிரிடலாம். தென்னந்தோப்பைச் சுற்றிலும் சூபாபுல், மற்றும் கிளரிசிடியா குறுமரங்களை நெருக்கமாக 2-3 வரிசையில் நட்டு உயிர்வேலியாகவும் பசுந்தீவனம் உற்பத்திக்கும் பயன்படுத்தலாம்.6 முதல் 7 ஆண்டுகள் வளர்ந்த குட்டை வகை மாந்தோப்பில் மர வரிசைக்கிடையே உள்ள 2 மீட்டர் இடைவெளியில் தீவன மரங்களை வளர்க்கலாம். தோப்பைச் சுற்றியுள்ள நீளத்திற்கு கிளரிசிடியா மரங்களை நெருக்கமாக வளர்ப்பதன் மூலம் ஆண்டுக்கு 6 டன் மர இலைகளை அறுவடை செய்யலாம். மானாவாரியில் வளரக்கூடிய கொழுக்கட்டைப்புல் மற்றும் முயல் மசால் தீவனத்தை மாற்றி மாற்றி மாமர வரிசைக்கிடையில் பயிர் செய்வதால் ஆண்டுக்கு 7.5 டன் மகசூல் கிடைக்கும்.
மூன்றடுக்குத் தீவன முறை
மானாவாரியில் 65 சதவீத நிலப்பரப்பை வேளாண் பயிர்களுக்கும், மீத பரப்பை மரங்கள் அடங்கிய மேய்ச்சல் தரையாகவும் மாற்ற வேண்டும். முதல் அடுக்காக மானாவாரியில் வளரும் பசும்புல் வகைகளையும், இரண்டாம் அடுக்கில் குறுந்தீவன மரங்களையும், மூன்றாம் அடுக்கில் பெருந்தீவன மரங்களையும் வளர்த்து, மர இலைகள், புல் மற்றும் வேளாண் பயிர்களின் கழிவுகளை சேர்த்து மாடுகளுக்கு தீவனமாக தரலாம்.
பாதை ஓரத் தீவன மர வளர்ப்புகிராமத்தில் 350 மீட்டர் நீளமுள்ள பாதையிருந்தால் இருபுறமும் மர ஊடு பயிர் முறையில் சூபாபுல் மர வரிசைகளை மிக நெருக்கமாக பயிர் செய்யலாம்.
உமாராணிபேராசிரியர்,கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆய்வு மையம்திருப்பரங்குன்றம்,மதுரை-50452 – 248 3903.
நன்றி:தினமலர்