ஈ புழுக்களால் கால்நடைகளுக்கு இவ்வளவு பாதிப்பா..??
ஈ புழுக்கள் உருவாகும் விதம் மற்றும் சிகிச்சை முறை!!
ஈ புழுக்கள் உருவாகும் விதம்
ஈ முட்டையிடுகிறது. முட்டையிலிருந்து ஈ புழு வெளிவருகிறது. இந்த ஈ புழு கூட்டுப்புழுவாகிறது. இந்தக் கூட்டுப்புழு ஈ ஆக மாறுகிறது.
ஈயின் இனப்பெருக்கத்தின் ஒரு நிலைதான் ஈ புழு. பசுவின் மூக்கு, வாய், கண், முகம், பிறப்புறுப்பின் வாய் ஆகியவற்றில் கசியும் சளி போன்ற பசை நீரைக் குடித்து ஈக்கள் வாழ்கின்றன.
காயங்களிலும், புண்களிலும் ஈக்கள் முட்டையிடுகின்றன. முட்டையிலிருந்து 24 மணி நேரத்தில் ஈ புழுக்கள் வெளிவருகின்றன.
கன்று ஈனும் பொழுது கால்நடைகளின் பிறப்புறுப்புகளில் ஏற்படும் காயங்களிலும், கீறல்களிலும் புழுப்புண் ஏற்படும்.
ஈ புழுக்கள் புண்ணை துளைத்து சதையை உண்ணுகின்றன.
சில சமயம் எலும்பு வரைத் துளைத்து சதையே இல்லாமல் செய்துவிடும். பிறந்த கன்றுகளில் கொப்புழ் புழு புண் சாதாரணமாக ஏற்படுகிறது.
4-6 நாட்கள் சதையை உண்டு வாழும். அதன் பின் கூட்டுப்புழுவாகத் தரையில் விழுந்துவிடும்.
புழு வைத்த புண்களுக்கு சிகிச்சை முறை
சிகிச்சை முறை 1
100 கிராம் சீத்தாப்பழ இலையை இடித்துச் சிறிதளவு கற்பு+ரம், புகையிலைத்தூள் 20 கிராம் ஆகியவைகளுடன் கலந்து புழுக்கள் பிடித்த புண்ணுக்குப் போட்டால் புழுக்கள் இறந்துவிடும். பின்பு புண் ஆறிவிடும்.
சிகிச்சை முறை 2
கால்நடைகளுக்கு ஏற்படும் புண்களில் புழு வைத்திருந்தால் 50 மி.லி குப்பைமேனிச் சாற்றைப் பிழிந்து, அதில் 50 மி.லி அளவு சுண்ணாம்பு நீர் கலந்து புண்களில் தடவி வர புழு வெளியேறி புண் விரைவில் ஆறிவிடும்.
புண்களில் உருவாகும் புழுக்களைக் கட்டுப்படுத்த பாகற்கொடியின் இலைகளை அரைத்துப் பிழிந்த சாறுடன் ஒரு சிட்டிகை உப்புச் சேர்த்து தினந்தோறும் காலையில் புண்களின் மீது தடவி வர வேண்டும்.
சிகிச்சை முறை 3
புழு வைத்த புண் உள்ள பகுதியில் எருமைப்பாலை ஊற்றி விடும் போது புழுக்கள் புண்களை விட்டு வெளியே வருகின்றன.
அவற்றை எடுத்து அப்புறப்படுத்தி பின்னர் புண்களை பஞ்சினாலோ அல்லது துணியாலோ சுத்தப்படுத்தி விட வேண்டும்.
பின்பு பாகற்காய்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டி களிம்பு பதத்திற்கு வரும் வரை அரைத்து, புண்களின் மீது பு+சிவிட வேண்டும்.
இந்த முறையை தினமும் காலையிலும், மாலையிலும் பின்பற்றினால் புண்கள் ஆறிவிடும்.
மற்ற வகை காயங்களுக்கு சிகிச்சை முறை
ஊமத்தன் இலைச்சாறு 50 மி.லி, தேங்காய் எண்ணெய் 100 மி.லி, மயில் துத்தம் 1 கிராம் சேர்த்து காய்ச்சிய மத்தான் தைலம் எனப்படும் எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்த புழு பிடிக்காமலேயே புண் ஆறும். புழுக்கள் இருந்தாலும் வெளியேறிவிடும். எல்லா விதமான புண்களுக்கும் இதனைப் பயன்படுத்தலாம்.
நன்றி:நித்ரா உழவன் மாடு