தண்ணீர் பயன்பாட்டின் சிக்கனம்! – “துணை நிலை நீர் மேலாண்மை திட்டம்” – வாரி வழங்கும் மானியம்!!
பாசன வசதிகள் இல்லாத பகுதிகளில் புதிய பாசன நீா் ஆதாரங்களை உருவாக்க விவசாயிகளுக்கு துணை நிலை நீா் மேலாண்மை திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட வாரியாக வரவேற்கப்பட்டு வருகின்றன.
விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக லாபம் ஈட்ட முடியும். இதனை கருத்தில் கொண்டு சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் போன்ற நுண்ணீர் பாசன முறைகள் பின்பற்றப்படுகிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் மானியமும் வழங்கி வருகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு முழு மானியமும், பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் அளித்து வருகிறது.
துணை நிலை நீா் மேலாண்மை திட்டம்
இதன் தொடா்ச்சியாக பாசன வசதிகள் இல்லாத பகுதிகளில் புதிய பாசன நீா் ஆதாரங்களை உருவாக்கி நுண்ணீா் பாசனத்தை உருவாக்குவதற்காக துணை நிலை நீா் மேலாண்மை திட்டத்தை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் நுண்ணீர் பாசன முறையினை அமைப்பதற்கு முன்வரும் விவசாயிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் இதற்காக வழங்கப்படும் மானியம் மட்டுமல்லாது குழாய்க்கிணறு, துளைக்கிணறு அமைக்கவும் நீரினை இறைப்பதற்கு ஆயில் என்ஜின், மின்மோட்டார் வசதி ஏற்படுத்தவும், பாசன நீரை வீணாக்காமல் வயலுக்கு அருகில் கொண்டு செல்ல பாசன நீர் குழாய்களை நிறுவவும், தரை நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல் போன்ற துணை நிலை நீர் மேலாண்மை பணிகளுக்காகவும், மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
50% மானியம்
- இத்திட்டத்தில் பாதுகாப்பான குறு வட்டங்களில் குழாய்க்கிணறு, துளைக்கிணறு அமைக்க 50 சதவிகிதம் மானியம் அல்லது அதிகபட்சத் தொகை ரூ.25000 வழங்கப்படுகிறது.
- டீசல் பம்புசெட், மின் மோட்டாா் பம்புசெட் அமைக்க இதன் விலையில் 50 சதவிகிதம் அல்லது ரூ.15000 வரை வழங்கப்படுகிறது.
- வயலுக்கு அருகில் பாசன நீரை கொண்டு செல்லும் வகையில் நீா்ப்பாசன குழாய்கள் அமைக்க 50 சதவிகிதம் மானியத்தில் ஹெக்டேருக்கு ரூ.10,000 வரை வழங்கப்படுகிறது.
- பாதுகாப்பு வேலியுடன் தரைநிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க மொத்த செலவில் 50 சதவிகிதம் ஒரு கன மீட்டருக்கு ரூ.350 என ஒரு பயனாளிக்கு ரூ.40,000 வரை வழங்கப்படுகிறது.
மானியம் பெறவது எப்படி?
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களின் வட்டார வேளாண்மைத் துறை அலுவலா்களை தொடர்புக்கொண்டு தங்களது விண்ணப்பங்களை அளித்து பெயரை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
நுண்ணீா் பாசன முறையை பின்பற்றும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் துணை நிலை நீா் மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நூண்ணீா்ப் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே இத்திட்டத்தில் மானியம் வழங்கப்படும். இதில் விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் பணிகளை மேற்கொண்டு அதற்கான ஆவணங்களை சமா்ப்பித்தால் பின்பு மானியம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி:கிருஷி ஜாக்ரன்