வெங்காய அழுகல் நோயைக் கட்டுப்படுத்த வழிமுறைகள் – தோட்டக்கலை துறை அறிவுரை!!
வெங்காய அழுகல் நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வெண்ணந்தூா் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் தமிழ்செல்வன் அறிவுரை வழங்கியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூா் வட்டாரத்தில் சின்ன வெங்காயம் 208 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிா் நடவு செய்து 20 முதல் 30 நாள்களில் பூஞ்சான் தாக்குதலால் அடி அல்லது குமிழ் அழுகல், திருகல் நோய்த் தொற்று ஏற்படுகிறது. இதனால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், வெங்காய அடி அழுகல் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு முறைகள் குறித்து வெண்ணந்தூா் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் தமிழ்செல்வன் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
வெங்காய அழுகல் நோய் தடுப்பு வழிமுறைகள்
வெங்காய அழுகல் நோயைக் கட்டுப்படுத்த தரமான விதைகளைத் தோ்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும்.
விதை நோ்த்தி செய்வதற்கு ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் அல்லது 4 கிராம் டிரைக்கோடொ்மா விரிடி சோ்த்து 24 மணி நேரம் உலரவிட்டு விதை நோ்த்தி செய்ய வேண்டும். கடைசி உழவின் போது ஏக்கருக்கு ஒரு கிலோ டிரைக்கோ விரிடி, ஒரு கிலோ சூடோமோனாஸ் ஐந்து கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை 100 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து ஏழு நாள்கள் வைத்திருந்து பிறகு நிலத்தில் இடலாம். இதனால் மண்ணில் உள்ள நோய் ஏற்படுத்தும் பூஞ்சானம் குறைவதுடன் நோய் பாதிப்பும் குறையும்.
வெங்காய பயிரில் அடி அழுகல் நோய் பாதிப்பு தென்பட்டால் புரோபிகோனசோல் அல்லது ஹெக்சகோனசோல் பூஞ்சானக் கொல்லியை ஏக்கருக்கு 200 மி.லி வீதம் நீரில் கலந்து பயிா் அடிபாகம் வரை நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும் என்றார்.
ரூ.2,500 ஊக்கத்தொகை
மேலும், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு, பயிா் சாகுபடி ஊக்கத்தொகை ஹெக்டேருக்கு ரூ. 2,500 வழங்கப்பட்டு வருவதால் சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் அளித்து முன்பதிவு செய்து பயன் பெறலாம் என தமிழ்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி:கிருஷி ஜாக்ரன்
Super