இனி விவசாயிகள் மின் இணைப்புக்காக அலைய வேண்டியதில்லை… தமிழக அரசின் புதிய மாற்றங்கள்!
விவசாய மின் இணைப்பு பெறுவதில் தொடங்கி, பெயர் மாற்றம், இடம் மாற்றம், கூட்டு இணைப்பு என எந்தப் பணியாக இருந்தாலும், தமிழ்நாட்டில் அவ்வளவு சுலபமாக நடக்காது.
கர்நாடக மாநிலத்தைப் பொறுத்தவரை ஒரு விவசாயி தன்னுடைய நிலத்திலிருக்கும் பம்ப்செட்டுக்கு மின்சாரம் தேவையென்றால் இணைப்பு கேட்டுக் காத்திருப்பதில்லை. எங்கே, எப்போது வேண்டும் என்றாலும் தானே இணைப்பைக் கொடுத்துக் கொள்ளலாம்.
‘யோவ்… தமிழ்நாட்டுல அனுமதி கேட்டு பதினைஞ்சி, இருபது வருஷமா வெயிட்டிங் லிஸ்ட்ல காத்துக்கிட்டிருக்கோம். அங்க என்னடான்னா தேவைப்பட்டப்ப எடுத்துக்கலாம்கறீங்களே. ரொம்ப அக்கிரமமாவுல இருக்கு’ என்கிறீர்களா?
உண்மையில் இந்தத் திட்டத்துக்குக் கர்நாடக விவசாயிகள் வைத்திருக்கும் பெயரும் ‘அக்கிரமம்’தான்.
எங்கே மின்சார இணைப்பு வேண்டும் என்றாலும் உடனே மின்சாரத்தை எடுத்துக்கொள்ளலாம். அதன் பின்பு மின்சார வாரியத்துக்குத் தகவல் கொடுத்தால் போதும். இதற்கு `அக்கிரம சக்கரம’ என்று செல்லமாக விவசாயிகள் பெயர் வைத்துள்ளார்கள். அதாவது, முதலில் அதிரடியாக எடுத்துக்கொண்டு பிறகு, மின்சார வாரிய அலுவலர்களிடம் பணம் கட்டி சட்டப்படி மின் இணைப்பு பெற்றுவிடலாம். அங்கேயும் இலவச மின்சாரம்தான்.
தமிழ்நாட்டில் விவசாய மின் இணைப்பு உள்ளிட்ட பணிகளை எளிதாகப் பெற முடியாது. பையில் பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே மின்சார வாரிய அலுவலர்கள் ‘கருணை’ காட்டுவார்கள். மின் இணைப்பு பெறுவதில் காலதாமதம் இருப்பதால், நிலத்தை வாங்கிப் போட்டு விவசாயம் செய்யாமலே உள்ளவர்களும் தமிழ்நாட்டில் உள்ளனர்.
இந்தியாவிலேயே விவசாய மின் இணைப்புக்கு ஏகப்பட்ட சட்ட திட்டங்களும் அதில் குளறுபடிகளும் நிறைந்த மாநிலமாகத் தமிழ்நாடு நேற்றுவரை இருந்தது. இன்று அதற்கான விடிவு காலம் பிறந்துள்ளது.
விவசாய மின் இணைப்பு பெறுவதில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் இருந்தன. ஒவ்வொரு மின் இணைப்புக்கும் பல்வேறு ஆவணம், ஒப்புதல் என விவசாயிகள் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வந்த நிலையில் அவற்றையெல்லாம் சரி செய்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் எம்.சந்திரசேகர், உறுப்பினர்களான டி.பிரபாகரராவ், ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கடசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. இதை அரசிதழில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
அதன் விவரங்களைப் பார்ப்போம்.
மின் இணைப்பு கோரும் விவசாயியின் கிணற்றில் கூட்டு சொந்தக்காரர் இருப்பின் கூட்டு சொந்தக்காரர் ஒப்புதல் கொடுத்தால் மட்டுமே விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நிலை உள்ளது. இதனால் பல விவசாயிகள் விவசாயத்துக்கான மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்க முடியாமல் துயரப்பட்டு வருகின்றனர். இதுபோன்ற நிலையில் இருக்கும் விண்ணப்பதாரர் உறுதிமொழி பத்திரம் கொடுத்தால் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும். ஒரே சர்வே நம்பரில் அல்லது ஒரே உட்பிரிவில் சர்வே நம்பரில் ஒருவருக்கு 2 கிணறுகள் இருக்கும் பட்சத்தில் அவர் பெயரில் ஒவ்வொரு கிணற்றுக்கும் தனித்தனி மின் இணைப்பு அனுமதிக்கப்படும்.
ஆனால், குறைந்தது ஒவ்வொரு கிணற்றுக்கும் அரை ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். விவசாய மின் இணைப்பு இடமாற்றம் தமிழ்நாட்டின் எந்தப் பகுதிக்கும் அனுமதிக்கப்படும். மின் இணைப்பை இடமாற்றம் செய்ய ஆகும் செலவை விண்ணப்பதாரர் ஏற்க வேண்டும். இட மாற்றத்துக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஒருவருக்கு மட்டும் சொந்தமான கிணற்றில் அவரது பெயரில் உள்ள மின் இணைப்பை வேறு இடத்திலுள்ள அவருக்கு மட்டும் சொந்தமான கிணற்றுக்கு அல்லது கூட்டாகச் சொந்தமான கிணற்றுக்கு மாற்றம் செய்து கொள்ளலாம்.
கூட்டாகச் சொந்தமான கிணற்றில் ஒருவர் பெயரில் உள்ள மின் இணைப்பை வேறு இடத்துக்கு அவருக்கு மட்டும் அல்லது கூட்டாகச் சொந்தமான கிணற்றுக்கு மாற்றம் செய்து கொள்ளலாம். இதற்கு மின் இணைப்பு உள்ள கிணற்றின் கூட்டாளிகள் பெயரில் மின் இணைப்புகள் இருக்க வேண்டும் அல்லது கூட்டாளிகள் ஒப்புதல் பெற வேண்டும். கிணறு மற்றும் நிலம் ஆகியவற்றின் உரிமைச் சான்றை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைத்தால் போதுமானதாகும்.
வேறு எந்தவிதமான உரிமை சான்றுகளும் அவசியம் இல்லை. குறைந்தது அரை ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். மின் இணைப்புக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் மின்மோட்டார் பொருத்துதல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடித்து மின் இணைப்பு பெறத் தயாராக இருப்பதாக விவசாயி தெரியப்படுத்திய நாளில் இருந்து 3 நாள்களுக்குள் மின் இணைப்பு தர வேண்டும்.
விவசாய மின் இணைப்பில் கரும்பு அரவை, அறுவடை இயந்திரம் போன்றவற்றை இயக்க சேஞ் ஓவர் ஸ்விட்ச் அமைத்து உபயோகத்துக்குக் கொண்டு வருவதற்கு முன்பு, மின்சார அலுவலரிடம், ஏரளமான ஆவணங்களைக் கொடுத்து அனுமதி பெற வேண்டும். இப்போது எந்தவிதமான ஆவணங்களும் சான்றுகளும் இந்த அனுமதிக்கு அவசியமில்லை .
அனுமதி கோரும் கடிதம் கிடைக்கப்பெற்ற 15 நாள்களுக்குள் மின்சார அலுவலர் சேஞ் ஓவர் ஸ்விட்ச் அமைப்பை பார்வையிட்டு, சோதனை செய்து சீல் செய்ய வேண்டும். டெஸ்ட் ரிப்போர்ட் நகல் ஒன்றை மனுதாரருக்கு அதே இடத்தில் வழங்க வேண்டும்.
15 நாள்களுக்குள் அனுமதி கிடைக்கப் பெறாத நிலையில், விவசாய அவசர நிமித்தம் காரணமாகச் சேஞ் ஓவர் ஸ்விட்ச்சை அனுமதிக்கப்பட்ட விவாசய தேவைகளுக்கு ஏற்ப அவ்வப்போது இயக்கிக்கொள்ளலாம். சேஞ்ஓவர் ஸ்விட்ச் மூலம் கொடுக்கப்படும்.
மின்சார மோட்டார் பளு(HP) எந்த நேரத்திலும் அனுமதிக்கப்பட்ட HP-க்கு மேல் இருக்கக் கூடாது.
இந்த அனுமதி ஒருமுறை மட்டுமே தரப்பட வேண்டும். சேஞ் ஓவர் ஸ்விட்ச் மூலம் அனுமதிக்கப்பட்ட அனைத்து விவசாயச் செயல் மாற்றத்துக்கும் ஒவ்வொரு முறையும் அனுமதி பெறத் தேவையில்லை.
இந்த மகிழ்ச்சியான தகவல்கள் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளன.
நன்றி:விகடன்
Super,
Sir min inaippu mottor thavira light eduvum pottu kolla mudiyuma.
Vivasaya kathaigalai iyakka mudiyuma
மின் மோட்டார் தவிர 40வாட்ஸ் பல்பு ஒன்று போட அனுமதி உண்டு
உங்கள் இரண்டாம் கேள்வி புரியவில்லை
நன்றி