மண்ணின் சக்தியூக்கியாக மாறி நீர்மேலாண்மைக்கு வித்திடும் ஹைட்ரோஜெல்!
வானம் மனமிறங்கி மழைபெய்தால்தான், ஆறு, குளம், கிணறு போன்ற நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரும். ஆனால், பாசன வேளாண்மை என்பது எப்போதுமே வானத்தை நம்பியே இருக்கிறது.
என்னதான் வாய்க்கால் தண்ணீரையோ, கிணற்று நீரையோத் தெளித்தாலும், மழையைக் கண்டால்தான், சூரியனைக் கண்ட தாமரை போல், புத்துணர்ச்சி பெற்று பச்சையாகக் காட்சியளிக்கின்றன பயிர்கள்.
வெயில் காலங்களில் மழை பெய்தாலும், மறுநாளே அதன் அடையாளமே இல்லாமல் போய்விடுகிறது. ஏனெனில், எருச்சத்து பற்றாக்குறையால், மண்ணுக்கு மழைநீரைப் பிடித்து வைக்கும் சக்தி குறைந்துவிட்டது.
மானாவாரி பயிராக இருந்தாலும் சரி, பாசனப் பயிராக இருந்தாலும் சரி, மழைநீரைப் பிடித்து வைத்திருக்கும் மண்ணில்தான் வெள்ளாமை நன்றாக வளரும். ஆனால் சக்கையான மண்ணிற்கு எவ்வளவுதான் இயற்கை எரு போட்டாலும், இந்த சக்தி கிடைப்பதற்கு 2 முதல் 3 ஆண்டுகளாவது ஆகும். அதுவரை நஷ்டத்திற்கு பண்ணையம் செய்ய முடியாது.
ஆர்கானிக் பாலிமரும் தண்ணீரும் (Organic polimer)
இந்தப் பிரச்னையைத் தீர்த்துவைக்கிறது, தண்ணீரை உறிஞ்சி வைத்துக்கொள்ளும் தன்மை படைத்த ஹைட்ரோஜெல் என்னும் சிந்தெடிக் ஆர்கானிக் பாலிமர் (Synthetic organic polimer).
சொட்டுநீர் பாசனத்தைக்கூட கொஞ்சமாவது தண்ணீர் வசதியுள்ள பாசனப் பகுதியில்தான் கடைப்பிடிக்க முடியும். ஆனால், தண்ணீரை உறிஞ்சு வைத்துக்கொண்டு, பயிருக்கு தேவைப்படும்போது மெதுவாகத் தரக்கூடிய இந்த ஹைட்ரோஜெல்லை பாசனமில்லா பயிர்சாகுபடிக்கும் பயன்படுத்தலாம்.
பாசனப்பற்றாக்குறை உள்ள இறவை சாகுபடி பயிரிலும் பயன்படுத்தலாம். மண்ணில் போட்டவுடன் தன்னைச்சுற்றியுள்ள ஈரம் ஆவியாவதற்கு முன்பே இது கிரகித்துக் கொண்டு தன்னோடு வைத்துக் கொள்ளும்.
ஹைட்ரோ ஜெல் தோற்றம் (Hydrogel appearance)
பார்ப்பதற்கு சர்க்கரை போல் இருக்கும் இந்த ஹைட்ரோ ஜெல், தன் எடையைப்போல் 500 முதல் 600 மடங்கு தண்ணீரை உறிஞ்சி வைத்துக்கொள்ளும் அபூர்வ சக்தி கொண்டது. தண்ணீர் தன் உள்ளே போனவுடன் உப்பி ஜெல்லியைப் போல மாறிவிடும். அவ்வாறு, தான் உறிஞ்சியத் தண்ணீரை மெதுவாகப் பயிருக்கு தந்துகொண்டிருக்கும். இதன்மூலம், தண்ணீர் பற்றாக்குறை உள்ள சமயத்தில், பாசனப் பயிர்களையும், மழை பொய்த்துப்போகும் காலங்களில் மானாவாரிப் பியர்களையும் காப்பாற்றிவிடும்.
பலப்பெயர்கள் (Other Names)
வடஇந்தியாவில் இந்த ஹைட்ரேஜெல் ஆபத்தாண்டன் ரொம்ப பிரபலம். கோதுமைப் பயிரை வறட்சியில் இருந்து காப்பாற்ற பயன்படுத்துகிறார்கள். லிகுவா அப்சார்ப் (Liqua absorb), அக்ரோசோக், சாயில் மாயிஸ்ட், வாட்டர்லாக், ஸ்டோக்டோ சார்ப், ஜலசக்தி என்று இதற்கு பல பெயர்கள் உண்டு.
எவ்வளவு போடலாம்?
வடமாநிலங்களில் கோதுமை பயிருக்கு ஏக்கருக்கு இரண்டு கிலோ வீதம், பத்து கிலோ மணலுடன் கலந்து மண்ணில் 5 முதல் 7 சென்டி மீட்டர் ஆழத்தில் விதைப்பு வரிசையில் போடுகிறார்கள். இதற்கு கையால் இழுக்கும் விதைப்புக்கருவியைப் பயன்படுத்துகிறார்கள்.
ஹைட்ரோஜெல்லின் பயன்கள் (Benefits of hydrogel)
ஹைட்ரோ ஜெல்லை விதைப்பின்போது மண்ணில் பயன்படுத்துவதால், மண்ணின் நீர்ப்பிடிப்புத் தன்மை அதிகரிக்கிறது.
பாசன நீர் அல்லது மழைநீரின் உபயோகத்திறன் அதிகரிக்கிறது. அதாவது தேவைக்கு அதிகமான நீர் வழிந்தோடுவது தடுக்கப்படுவதுடன், பிடித்து வைக்கப்பட்டு பயிருக்குத் தேவைப்படும்போது அளிக்கப்படுகிறது.
இதனால் மண்ணில் இடும் உரச்சத்தும் வீணாகக் கரைந்து வெளியேறுவது முற்றிலும் தடுக்கப்படுகிறது.
மண்ணின் இறுக்கம் குறைந்து நெகிழ்வடைகிறது.
மண் அரிமானத்தைத் தடுக்கிறது.
வறட்சிக் காலங்களில் பயிர் காய்ந்து போகாமல், காப்பாற்றப்படுகிறது.
மண்ணில் இடப்படும் பூச்சிமருந்து, களைக்கொல்லி போன்றவை வீணாகாமல் பயிருக்கு எடுத்துக் கொடுக்கப்படுகிறது.
அடிக்கடி பயிர்களுக்கு பாசனம் செய்யவேண்டிய அவசியமில்லை. மொத்தத்தில் முதல் 3 தண்ணீர் குறைத்து அளிக்கலாம்.
மண்ணில் காற்றோட்டத்தை அதிகரிப்பதுடன், நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் செயல்பாட்டையும் அதிகரிக்கின்றது.
தகவல்
டாக்டர். பா.இளங்கோவன்
இணை இயக்குநர்
வேளாண்மைத்துறை
சேலம்
நன்றி:கிருஷி ஜாக்ரன்