இயற்கை விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத்தொகை- தோட்டக்லைத்துறை வழங்குகிறது!!
மதுரையில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ஹெக்டெருக்கு ரூ.4000 ஊக்கத்தொகையும், வழக்கமான பருவம் தவிர்த்து மற்ற நேரத்திலும் காய்கறி பயிர்களை சாகுபடி செய்ய ஹெக்டேருக்கு ரூ.2500 ஊக்கத்தொகையும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என மாவட்ட தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.
நாட்டின் முதுகெலும்பாகக் கருதப்படும் விவசாயத்தை மேம்படுத்த ஏதுவாக மத்திய- மாநில அரசுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
அதிலும் குறிப்பாக விளைநிலத்தின் நலனை மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களின் உடல் நலத்தையும் கருத்தில்கொண்டு இயற்கை விவசாயம் செய்ய முன்வருவோருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
அபிவிருத்தித் திட்டம் (Horticulture Scheme)
அதன் ஒருபகுதியாக மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
காய்கறிகள், பழங்கள், வாசனைப் பயிர்கள், பூக்கள் மற்றும் மலைப்பயிர்கள் போன்ற உயா் மதிப்பு பயிர்கள் மற்றும் உயா் தொழில் நுட்ப உத்திகளை பயன்படுத்தி இத்திட்டத்தின் மூலம் பரப்பு விரிவாக்கம் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், கரூர், திருவள்ளுர், தூத்துக்குடி, மதுரை,விருதுநகர், நாமக்கல், திருவண்ணாமலை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த திட்டமானது செயல் பட்டு வருகிறது.
மேலும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க, ஊக்க தொகையாக ரூ.4000 ஒரு ஹெக்டருக்கு வழங்கப்படுகிறது. மகரந்த சேர்க்கையை அதிகப்படுத்தும் இனத்தின் கீழ், தேனீ காலணிகள், தேனி பெட்டி, தேனி பிழிந்தெடுக்கும் இயந்திரம் 50 சதவீதம் மானியத்தில் அனுமதிக்கப்பட்டு ரூ.26.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
50 % மானியம் (Subsidy)
தனி நபருக்கு நீர் அறுவடை அமைப்பு இனத்தின் கீழ், நீர் சேமிப்பு அமைப்பு அமைக்கவும், பாதுகாப்பான முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடியை அதிகரிக்க பசுமைக்குடில் அமைத்தல், நிழல் வலைக்குடில் அமைத்தல் மற்றும் நிலப்போர்வை போன்ற இனங்களுக்கு 50 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை இனத்தின் கீழ் ரூ.14.20 லட்சம் நிதியும், இயற்கை விவசாயம் செய்யும் இனத்தின் கீழ் நிலையான மண்புழு உர உற்பத்தி அமைப்பு, மண்புழு உரப் படுக்கை அமைக்க 50 சதவீத மானியத்தில் ரூ.14.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மனித வள மேம்பாட்டு இனத்தின் கீழ் விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் பயிற்சி வழங்க ரூ.13.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அறுவடைக்கு பிந்தைய மேலாண்மைக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள, 50 சதவீதம் மானியத்தில் குறைந்த செலவின வெங்காய சேமிப்பு கிடங்கு மற்றும் சிப்பம் கட்டும் அறை போன்றவை செயல்படுத்தப்பட உள்ளன.
தோட்டக்கலை பயிர்களுக்கான சந்தை உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த மானியத்துடன் கூடிய நடமாடும் காய்கறி விற்பனை வண்டிக்கு ரூ.11.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செயல்படுத்தப்பட உள்ளது.
விழுப்புரம் மாவட்டம்
இதனிடைய ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தில் பயன்பெறுமாறு விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் இந்திரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
விழுப்புரம் மாவட்டத்திற்கு ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் 2020-21ம் ஆண்டு திட்டத்தின் கீழ் சாதாரண நடவுச்செடிகள், பாரம்பரிய பழம் மற்றும் காய்கறி சாகுபடி, வீட்டுகாய்கறி தோட்டம் மேம்படுத்துதல், தோட்டக்கலை பயிர்களில் சிறப்பு அமைப்புகள் மற்றும் நடைமுறைகள், தோட்டக்கலை கருவிகள், உபகரணங்கள் ஆகிய இனங்களின் கீழ் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்படுகின்றது.
அதன்படி, எலுமிச்சைக்கு 5 ஹெக்டேருக்கு 66 ஆயிரம் ரூபாயும், பப்பாளிக்கு 10 ஹெக்டேருக்கு ரூபாய் 1.85 லட்சமும், சப்போட்டா 5 ஹெக்டேருக்கு 54,500 ரூபாயும், இதர பழங்கள் 5 ஹெக்டேருக்கு ரூ.1.50 லட்சமும், பாரம்பரிய பழம் மற்றும் காய்கறிகள் சாகுபடி 70 ஹெக்டேருக்கு ரூ.10.50 லட்சமும் வழங்கப்படும்.
பயன்பெறுவது எப்படி? (How to benefit)
இத்திட்டத்தில் இணைவதற்கு, விவசாயிகள்,
ஆதார் அட்டை நகல்
குடும்ப அட்டை நகல்
சிறு/ குறு விவசாயிகள் சான்றிதழ்
புகைப்படம்
நிலம் தொடர்பான ஆவணங்கள்
ஆகியவற்றுடன் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளை அணுகலாம்.
தகவல்களை தர வல்லவர்
தோட்டக்கலை அலுவலர்
தோட்டக்கலை உதவி அலுவலர்
தோட்டக்கலை உதவி இயக்குனர்
நன்றி:கிருஷி ஜாக்ரன்