துணை நிலை நீர் மேலாண்மைப் பணிகளுக்கும் வேளாண் துறை மூலம் மானியம் வழங்கப்படுகிறது
அன்பார்ந்த விவசாய பெருமக்களே, தமிழ்நாடு நீர்ப் பற்றாக்குறையுள்ள மாநிலம் என்பதால், பாசன வசதி ஏதும் இல்லாத இடங்களில் பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி, நுண்ணீர் பாசன முறையினை அமைப்பதற்கு முன்வரும் விவசாயிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில், நுண்ணீர்ப்பாசன முறைக்காக வழங்கப்படும் மானியம் மட்டுமல்லாது, கீழ்காணும் துணை நிலை நீர் மேலாண்மைப் பணிகளுக்கும் வேளாண் துறை மூலம் மானியம் வழங்கப்படுகிறது. 1.பாதுகாப்பான குறு வட்டங்களில் குழாய்க்கிணறு /துளைக்கிணறு அமைப்பதற்கு செலவிடப்படும் தொகையில் 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ. 25,000/- 2. டீசல் பம்பு செட் / மின் மோட்டார் பம்புசெட் நிறுவுவதற்கு அதன் விலையில் 50 சதவீத மானியம் ரூ.15, 000/- த்திற்கு மிகாமலும் 3.வயலுக்கு அருகில் பாசன நீரினை கொண்டு செல்லும் வகையில் நீர்ப்பாசன குழாய் அமைப்பதற்கு 50 சதவீத மானியத் தொகை எக்டருக்கு ரூ. 10,000/-க்கு மிகாமலும், 4.பாதுகாப்பு வேலியுடன் தரைநிலை நீர்த் தேக்கத் தொட்டி நிறுவுவதற்கு அதற்காகும் செலவில் 50 சதவீதத் தொகை ஒரு கன மீட்டருக்கு ரூ. 350/-க்கு மிகாமலும் நிதி உதவி ஒரு பயனாளிக்கு ரூ. 40,000/-க்கு மிகாமலும் மானியம் வழங்கப்படும் மேற்கண்ட பணிகளுக்கான மானியம் பெறுவதற்கு விவசாயிகள் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (நுண்ணீர் பாசனம்) அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் (நுண்ணீர் பாசனம்) அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு தங்கள் விண்ணப்பத்தினை அளித்து பெயரினை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேற்கண்ட பணிகளுக்கான மானியம் நுண்ணீர் பாசன முறையினை பின்பற்றுவதற்கு முன்வரும் விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் இப்பணிகளை விவசாயிகள் முதலில் தங்கள் சொந்த செலவில் மேற்கொண்டு அதற்கான முழு ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் விவசாயிகளுக்கு இப்பணிகளுக்கான மானியம், நுண்ணீர்ப் பாசன அமைத்து மானியத் தொகை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விடுவிக்கப்பட்ட பின் இத்துணை நீர் மேலாண்மைக்கான மானியத்தொகை முழுவதும் விவசாயிகளின் சேமிப்பு கணக்கிற்கு நேரிடையாக விடுவிக்கப்படும். பாசன நீரினை சிக்கனமான முறையில் பயன்படுத்துவதற்கு, நுண்ணீர்ப்பாசன முறையினை அமைக்க விரும்பும் விவசாயிகள் தங்கள் வயல்களில் நீர் ஆதார வசதியினை ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள இத்திட்டத்தில் பெருமளவில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேளாண்மை துறை