விவசாயத்துக்கு சாதாரண பிரிவின் கீழ் 25 ஆயிரம் மின்இணைப்புகள்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்
விவசாயத்துக்கு சாதாரண பிரிவின் கீழ் விண்ணப்பித்தவர்களில் பதிவு மூப்பு அடிப்படையில் 25 ஆயிரம் மின்இணைப்புகள் வழங்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மின்வாரியம், விவசாயத்துக்கு சாதாரணம், சுயநிதிப் பிரிவுகளில் மின்இணைப்புகளை வழங்கி வருகிறது. நடப்பு ஆண்டில் சாதாரண பிரிவுக்கு 25 ஆயிரம் இணைப்புகளும், சுயநிதி பிரிவில் ‘தத்கல்’ எனப்படும் விரைவு திட்டத்தில் 25 ஆயிரம் இணைப்புகளும் வழங்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. மின்இணைப்புகளை விரைந்து வழங்குமாறு விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று சாதாரண பிரிவில் 25 ஆயிரம் இணைப்புகள் வழங்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மாவட்டங்களில் உள்ள பிரிவு அலுவலக பொறியாளர்கள், கடந்த 2000 முதல்2003-ம் ஆண்டு வரை விண்ணப்பித்துள்ள விவசாயிகளுக்கு பதிவு மூப்பு அடிப்படையில் மின் இணைப்பு வழங்குவர். இதற்காக, விவசாயிகள் மோட்டார் பம்ப், கெப்பாசிட்டர் உள்ளிட்ட கருவிகளை வாங்கி, அது குறித்த தகவல்களை மின்வாரிய அலுவலகத்தில் தெரிவித்தால், அவர்களுக்கு உடனடியாக மின்இணைப்பு வழங்கப்படும். இவ்வாறு மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
நன்றி: இந்து தமிழ் திசை