பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் காரீப் 2020 பருவ பயிர்களை காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் மென்மேலும் பயன்பெறும் வகையில் மத்திய அரசு பல்வேறு புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு காரீப், 2020 பருவத்திற்கான மாவட்டங்கள், பயிர்கள் மற்றும் வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்து ஜுன் 1ஆம் தேதியன்று ஆணை வழங்கியுள்ளது. இதன்படி காரீப் பருவத்தில் கார் / குறுவை / சொர்ணவாரி நெல், பயறுவகைகள், சிறுதானியங்கள், எண்ணெய்வித்துக்கள், பருத்தி மற்றும் தோட்டக்கலைப் பயிர்கள், காப்பீடு செய்ய ஒவ்வொரு மாவட்டத்திற்கும் காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டு விவசாயிகள் பதிவு செய்து வருகின்றனர். டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை மேட்டூர் அணை ஜுன் 12ஆம் தேதி பாசனத்திற்காக திறக்கப்பட்டு, குறுவை சாகுபடி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்மாவட்டங்களில் குறுவை நெல் ஜுலை 31ம் தேதி வரை காப்பீடு செய்ய காலக்கெடு நிர்ணயித்துள்ள நிலையில், கடன்பெறும் விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டு கட்டணம் தாங்கள் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ பிடித்தம் செய்யப்படும். எனினும் இத்திட்டத்தில் பதிவு செய்ய விரும்பாத கடன் பெறும் விவசாயிகள் பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ள கடைசி தேதியிலிருந்து ஒரு வாரம் முன்னரே கடன் பெறும் வங்கியில் விருப்பமில்லா மனுவினை அளிக்கலாம். மேலும் கடன் பெறா விவசாயிகள் பொது சேவை மையங்களிலோ அல்லது வங்கிகளிலோ நடப்பு ஆண்டுக்கான அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், முன்மொழிவு படிவம் ஆகிய ஆவணங்களை வழங்கி காப்பீடு செய்து கொள்ளலாம். இதர மாவட்டங்களுக்கும் நெற் பயிர் மற்றும் இதரப் பயிர்கள் காப்பீடு செய்ய கடைசி தேதி நிர்ணயித்துள்ள நிலையில், விவசாயிகள் அனைவரும் தாங்கள் சாகுபடி செய்யும் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே காப்பீடு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். எனவே அறிவிக்கை செய்யப்பட்ட காரீப், 2020 பருவ பயிர்களை உரிய காலத்திற்குள் காப்பீடு செய்ய விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுவதுடன், எதிர்பாரா இயற்கை சீற்றங்களால் பயிர்கள் பாதிப்பு ஏற்படும்போது திட்ட விதிமுறைகளின் விவசாயிகளுக்கு இத்திட்டத்தின்கீழ் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இது குறித்தான விபரங்களை வட்டார வேளாண்மை உதவி இயக்குநரையோ, வேளாண்மை அலுவலரையோ, உதவி வேளாண்மை அலுவலரையோ அல்லது வங்கிகளையோ அணுகி பெற்றுக் கொள்ள தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
வேளாண்மை துறை