உரம் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்க வேண்டிய வழிமுறைகள்
இன்றைய சூழ்நிலையில் உரங்களின் பயன்பாட்டுத் திறனை அதிகரிப்பது என்பது விவசாயத்தில் மிக முக்கியமான ஒன்றாகும். பல்வேறு காரணியால் நாம் இடும் உரமானது வீணாகுகின்றன. எனவே கீழ்கண்ட வழிமுறைகளைக் கொண்டு உரத்தினுடைய பயன்பாட்டு திறனை நம்மால் அதிகரிக்க இயலும். அவை, தற்போதைய நிலையில் மண் ஆய்வு செய்வது என்பது மிக முக்கியமானது. மண்ணின் ஆய்வு முடிவைக் கொண்டு பயிர்களுக்கு உரமிடுதல் மிகச்சிறந்தது. மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு உரங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது கார மண்ணுக்கு அமில உரங்களும், அமில மண்ணுக்கு கார உரங்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும். உரங்களை மண்ணின் மேற்பரப்பில் இடாமல் 3-4 செ.மீ அளவுக்கு விதையின் அருகிலோ அல்லது அடியிலோ இடுவது மிக்க நல்லது. இவ்வாறு செய்வதால் களைகளின் வளர்ச்சியைத் தடுக்க இயலும் . மணி மற்றும் சாம்பல் சத்து உரங்களை அடி உரமாக இட வேண்டும். மண்ணானது கடின மண் வகையாக இருக்கும் போது, பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்து உரத்தில் பாதியை அடி உரமாகவும் மீதமுள்ளவற்றை மேலுரமாக பிரித்து இடுவது சிறந்தது. இலேசான மண் வகையை சேர்ந்தது என்றால் பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்து உரத்தினை 3 பகுதியாக சமமாக பிரித்துக் கொள்ளவும். முதல் பகுதியினை அடி உரமாகவும், இரண்டாவது பகுதியினை 30 நாள் விதைப்புக்கு பின் மற்றும் மூன்றாவது பகுதியினை 50-60 நாட்கள் விதைப்புக்கு பின் இடுவது மிகவும் நல்லது. உரக்கலவை அட்டவணையின்படி உரங்களைக் கலக்கி உரக்கலவையை பயிர்களுக்கு இட வேண்டும். வயலில் நீர் வடித்த பிறகு மற்றும் களை எடுத்த பிறகு மேல் உரமிடுதல் மிகவும் உகந்தது. இவ்வாறு செய்வதன் மூலம் ஊட்டச்சத்து இழப்பினை நம்மால் குறைக்க முடியும். உரமிட்ட பிறகு குறைந்தது ஒரு வாரம் வரையில் அதிக நீர் பாய்ச்சுவதோ அல்லது நீர் தேங்கி இருப்பதையோ தவிர்க்க வேண்டும். அமில மண்களில் சுண்ணாம்பு பொருட்களைத் தேவைக்கேற்ப இட்டு சரி செய்ய வேண்டும். வறண்ட காலத்தில் தழைச்சத்தினை மண்ணில் ஆழமாக இடுவதோ அல்லது இலை வழியாக தெளிப்பதோ மிக சிறந்தது. அங்கக உரங்கள் அல்லது பசுந்தாள் உரங்களை 2 – 3 வருடங்களுக்கு ஒரு முறையாவது கண்டிப்பாக இட வேண்டும். நீர் தேங்கியுள்ள மண்கள் அல்லது கால்சியம் அதிகமுள்ள மண்களில் மெதுவாக தழைச்சத்தை வெளியிடும் உரங்களான கந்தக முலாமிட்ட யூரியா, யூரியா குருணைகள், வேம்பு கலந்த யூரியா இட வேண்டும். இதனால் தழைச்சத்து இழப்பைக் குறைக்கலாம். தகுந்த பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முறையான பண்படுத்தல் முறைகளை செயல்படுத்த வேண்டும். இதனால், நாம் மண்ணில் இட்ட ஊட்டச்சத்துக்களை பயிர்கள் எடுத்துக் கொள்ள உகந்ததாக இருக்கும். கட்டுரையாளர்: பெ. பவித்ரன், முதுநிலை வேளாண் மாணவர் (உழவியல் துறை), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர். மின்னஞ்சல்: pavithran_agr@outlook.com
நன்றி:விவசாயம்