பயிர்களை நாசப்படுத்தும் வெட்டுக்கிளியை சமாளிப்பது எப்படி? வேளாண் பல்கலைக்கழகம் விளக்கம்
மராட்டியத்தில் பயிர்களை நாசமாக்கும் வெட்டுக்கிளியை சமாளிப்பது குறித்து வேளாண் பல்கலைக்கழகம் விளக்கம் அளித்து உள்ளது.
மும்பை,
கொரோனா வைரசால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ள மராட்டியத்திற்கு மற்றொரு ஆபத்தாக விவசாய பயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள் அழையா விருந்தாளியாக நுழைந்துள்ளன.
விதர்பா மண்டலத்தில் உள்ள நாக்பூர், பண்டாரா, கோண்டியா மாவட்டங்களுக்குள் கூட்டம், கூட்டமாக படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள் பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகின்றன.
விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள வெட்டுக்கிளியை சமாளிப்பது தொடர்பாக பர்பனியில் உள்ள வசந்த்ராவ் நாயக் வேளாண் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
ஈரமான மணல் நிலத்தில் பெண் வெட்டுக்கிளிகள் 50 முதல் 100 முட்டைகள் வரை இடும். இந்த முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் காலம் சுற்றுச்சூழலை பொறுத்தது. 2 முதல் 4 வாரங்கள் வரை ஆகலாம். லார்வாக்கள் (புழுக்கள்) வெளியே வரும் போது உடனடியாக பறக்க முடியாது. விவசாயிகள் 60 செ.மீ. அகலத்திலும், 75 செ.மீ. பள்ளமாகவும் அகழிகளை தோண்டலாம். இது சிறிய வெட்டுக்கிளிகளை பிடிக்க உதவும். லார்வாக்கள் வளர்ந்து குழுக்களாக பறக்க தொடங்கும் போது பயிரின் இலைகள், பூக்கள் மற்றும் விதைகளை அழித்துவிடும். வளர்ச்சி அடைந்த வெட்டுக்கிளிகள் தங்களது எடைக்கு சமமான உணவை உண்ணும். அவற்றால் மணிக்கு 12 முதல் 16 கி.மீ. வேகத்தில் பறக்க முடியும். வெட்டுக்கிளிகள் கூட்டம் ஒரு சதுர கி.மீ. பரப்பளவில் இருந்தால், அவற்றின் எடை 3 ஆயிரம் குவிண்டால் வரை இருக்கும்.
இரவு நேரத்தில் புகையை கொண்டு வெட்டுக்கிளிகளை அழிக்கலாம். ஆனால் பயிர்கள் தீப்பிடித்து விடாமல் விவசாயிகள் கவனமாக இருக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 2.5 லிட்டர் வேப்ப எண்ணெயை தெளித்தால் வெட்டுக்கிளிகளை திறம்பட கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நன்றி:தினத்தந்தி