பசுந்தீவன பயிர் சாகுபடி
கால்நடைகளின் உணவில் பசுந்தீவனங்கள் தற்போதைய சூழலில் மிகவும் இன்றியமையாதது. பாலில் கொழுப்புச்சத்து அதிகரிக்க பசுந்தீவனங்கள் காரணமாக இருக்கின்றன. மேலும் கறவை மாடுகளின் இனவிருத்தி செயலில் அவை வைட்டமின் ‘ஏ’ சத்துக்களை வாரி வழங்குகின்றன. விவசாயிகள் விளை நிலங்களில் ஒருசிறு பகுதியை பசுந்தீவன சாகுபடிக்கு ஒதுக்க வேண்டும். அப்படி ஒதுக்கி சாகுபடி செய்யும் போது கோடையில் தீவன வறட்சியில் அவை பெரிதும் கை கொடுக்கின்றன. பசுந்தீவன சாகுபடியை தானிய வகை, தீவனப் பயிர்கள், புல் வகை தீவனப்பயிர்கள், பயறு வகை தீவனப் பயிர்கள், மரவகை தீவனப்பயிர்கள் என பிரிக்கலாம். தீவனப்பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் மண்ணின் தன்மை மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப பயிர்வகைகளை பயிரிடலாம். களர் மற்றும் உவர் நிலத்தில் கினியாபுல், வேலி மசால், தட்டைப்பயிறு மற்றும் நீர்ப்புல் பயிரிடலாம். நிலத்தில் அமிலத்தன்மை இருந்தால் முயல் மசால், தட்டைப்பயறு, கினியாப்புல் சாகுபடி செய்யலாம். தரிசு நிலம் மற்றும் வரப்பு ஓரங்களில் பயிரிட சூபாபுல், அகத்தி, கிளைரிசிடியா ஏற்றது. தண்ணீர் தேங்கிய நிலமாக இருந்தால் நீர்ப்புல் நல்லது. கறவை மாடுகளுக்கு நாளொன்றுக்கு 15 முதல் 25 கிலோ பசுந்தீவனம் தேவைப்படும். இதில் மூன்றில் இரண்டு பங்கு தானிய வகை மற்றும் புல் வளர்த்து தீவனத்தையும் மூன்றில் ஒரு பங்கு பகுதியை பயிறு வகை தீவனமாக கொடுக்கலாம். பசுந்தீவனங்களை துண்டுகளாக நறுக்கி கொடுப்பதே சிறந்தது. துண்டின் அளவு அரை அங்குலத்திற்கு கீழ் குறைந்தால் பாலில் கொழுப்புச்சத்து குறையும். வேலி மசால், முயல் மசால், சூபாபுல் விதைகளை 80 டிகிரி சென்டிகிரேட் வெந்நீரில் 5 நிமிடம் இட்டு பிறகு குளிர்ந்த நீரில் 10 மணி நேரம் ஊற வைத்து விதைப்பு செய்வதால் முளைப்புத்திறன் அதிகரிக்கும். – டாக்டர். வி.ராஜேந்திரன் முன்னாள் இணை இயக்குனர் கால்நடை பராமரிப்புத்துறை 94864 69044
நன்றி:தினமலர்