கால்நடை இன்சூரன்ஸ் வகைகள்
விவசாயம் பொய்க்கும் போதெல்லாம் விவசாயிகளுக்கு உறுதுணையாக ஆதரவாக இருப்பவை கால்நடைகள் தான். விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் கால்நடைகளுக்கு காப்பீடு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக செயல்படுகிறது. பசு, எருமை, பொலி காளை, காளை மாடு, வெள்ளாடு, செம்மறி, பன்றி மற்றும் கோழி உள்ளிட்ட அனைத்து வகையான கால்நடைகளுக்கும் காப்பீடு செய்து பயன் பெறலாம். காப்பீடு செய்யப்படும் கால்நடைகள் ஆரோக்கியத்துடன் நோயின்றியும், எவ்விதமான காயங்களின்றியும், தற்காலிக அல்லது நிரந்தர ஊனமின்றியும் இருக்க வேண்டும். கால்நடைகளுக்கு மூன்று விதமான காப்பீடு திட்டங்கள் உள்ளன. இழப்புக் காப்பீடு: கால்நடைகள் இறக்க நேரிட்டால் இழப்பீட்டு காப்பீட்டு தொகையை பெறலாம். கால்நடைகள் நோய்வாய்ப்பட்டு இறந்தாலோ அல்லது விபத்தில் இறந்தோலோ காப்பீட்டு தொகை கோரி விண்ணப்பிக்கலாம். தவிர இயற்கை சீற்றங்கள், கலவரங்கள், விஷக்கடியால் இறந்தாலும் காப்பீடு உண்டு. ஊனக் காப்பீடு: ஊனக்காப்பீடு என்பது நிரந்தர ஊனத்திற்காக இழப்பீடு கோர வகை செய்கிறது. வேலைக்காக வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு நிரந்தர ஊனம் ஏற்படும்போது அடுத்து அவற்றை வேலைக்கு பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. இச்சூழ்நிலைகளில் ஊனக் காப்பீடு பயன்படுகிறது. இடமாற்றக் காப்பீடு: கால்நடைகள் ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படும் போது ஏற்படும் இழப்புகளுக்கு இக்காப்பீடு உதவுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்ச பயண துாரம் 80 கி.மீ., அளவில் இருக்க வேண்டும். காப்பீடு செய்யப்படுவதற்கு முன்போ அல்லது காப்பீடு செய்யப்பட்டு 15 நாட்களுக்குள்ளாகவோ விபத்து ஏற்பட்டு இறந்தாலோ அல்லது நோய் வாய்ப்பட்டு இறந்தாலோ இழப்பீடு கோர இயலாது. வெக்கை நோய், அடைப்பான் தொற்று நோய், கோமாரி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்து போனால் காப்பீட்டுத் தொகை கிடைக்காது. – எஸ்.சந்திரசேகர் வேளாண் ஆலோசகர் அருப்புக்கோட்டை 63746 95399
நன்றி:தினமலர்