கால்நடைகளுக்கு தக்காளி கொடுக்காதீங்க! விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
விலையில்லாமல் வீசப்படும் தக்காளியை கால்நடைகளுக்கு உணவாக அதிகளவு அளிப்பதை தவிர்க்க வேண்டும் என கால்நடைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதியில் கிணற்றுப்பாசனத்துக்கு, ஒவ்வொரு சீசனில், 25 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடை செய்த தக்காளியை, 14 கிலோ கொண்ட பெட்டிகளில், அடுக்கி உடுமலை சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். சீசன் சமயங்களில், 15 ஆயிரம் முதல், 20 ஆயிரம் தக்காளி பெட்டிகள் வரை வரத்து இருக்கும்.இங்கிருந்து, கேரளா மறையூருக்கும், பிற மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு வந்தது. ஊரடங்கு காரணமாக, கேரளாவுக்கு தக்காளி செல்வது குறைந்துள்ளது; வரத்தும் அதிகரித்து விலை கிலோவுக்கு, 6 ரூபாய்க்கும் குறைவாகியுள்ளது.எனவே, பல்வேறு பகுதிகளில் இருந்து, கொண்டு வரும் தக்காளி, ஏலம் போகவிட்டால், சந்தையிலேயே கொட்டி வருகின்றனர். சிலர் திரும்பிச்செல்லும் வழியில், ரோட்டோரத்தில் தக்காளியை கொட்டி விடுகின்றனர். இவ்வாறு, வீசப்படும் தக்காளியை கால்நடைகளுக்கு உணவாக அளிக்க, கால்நடை வளர்ப்போர் சேகரித்து செல்கின்றனர்.இந்நிலையில், தக்காளியை அதிகளவு கால்நடைகளுக்கு உணவாக அளிப்பதை தவிர்க்க வேண்டும் என கால்நடைத்துறையினர் தெரிவித்துள்ளனர். அத்துறையினர் கூறியதாவது: ஆடு, மாடுகள், அதிக அளவில், தக்காளியை உட்கொள்வதால், வயிற்றில் நுண் கிருமிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். கார அமிலத்தன்மை, குறைந்து, மாடுகளின் வயிற்றில், புண் தோன்றி, அமில நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.வயிற்றில் அதிகமாக சுரக்கும் லாக்டிக் அமிலம், ரத்த ஓட்டத்தை அடைத்து, ரத்தத்தின் தன்மையை மாறி, மாடுகள் தீவனம் உண்ணாது. அசை போடாததால், உடல்நிலை பாதிக்கும். எனவே, தக்காளியை ஆடு, மாடுகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்துள்ளனர்
நன்றி:தினமலர்