ரசாயன பூச்சிக்கொல்லிகள் வேண்டாம் வேளாண்துறை அறிவுறுத்தல்
தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த வேண்டாம் என வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை சுற்றுப்பகுதியில், பிரதானமாக உள்ள தென்னை சாகுபடியில், வெள்ளை ஈ தாக்குதலால், பொருளாதார சேதம் ஏற்பட்டு வருகிறது. வேகமாக பரவி வரும், வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, பல்வேறு வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்றி வருகின்றனர்.
இது குறித்து வேளாண்மைத் துறையினர் கூறியதாவது: தென்னை மற்றும் பாக்கு மரங்களில், ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல், பரவலாக காணப்படுகிறது. இந்நோய் தாக்கமானது, மரங்களின் அடிப்பாகத்தில், உள்ள ஓலைகளில் மட்டுமே இருப்பதால், மகசூல் இழப்பு இருக்காது. ஏக்கருக்கு, 2 மஞ்சள் விளக்குப்பொறி மற்றும் 8 மஞ்சள் நிற ஒட்டுப்பொறி அமைக்கலாம். வேளாண் பல்கலை., யின் கீழ் செயல்படும் ஆழியாறு தென்னை ஆராய்ச்சி மையத்தில், எதிர் உயிர் பூச்சியான, என்கார்சியா ஒட்டுண்ணிகளை பெற்று, ஏக்கருக்கு, 100 வீதம் வெளியிடலாம். மத்திய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையத்திலிருந்து, கிரைசோபெர்லா இரை விழுங்கிகளை பெற்று, ஏக்கருக்கு, 400 வீதம் விடலாம். பாதிக்கப்பட்ட ஓலைகளின் மேல், தண்ணீரை வேகமாக அடித்தும், வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம். வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த விவசாயிகள், ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மேலும், விபரங்களுக்கு, வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு, வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நன்றி:அக்ரி டாக்டர்