பெரியகுளத்தில் ரசாயன கலப்பில்லாமல் நெல் சாகுபடி: அறுவடைக்கு முன்பே விலை நிர்ணயமான சுவாரஸ்யம்
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ரசாயன கலப்பு இல்லாமல் இயற்கை முறையில் ‘மாப்பிள்ளை சம்பா’ ரக நெல் விளைவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அறுவடைக்கு முன்பே பலரும் விலை கேட்டு இவற்றை வாங்குவதற்காக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பெரியகுளம் கீழவடகரைப்பகுதியில் 2 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாய முறையில் ‘மாப்பிள்ளை சம்பா’ எனும் பாரம்பரிய ரகம் விளைவிக்கப்பட்டுள்ளது.
தற்போது விவசாயத்தின் அனைத்து நிலைகளிலும் ரசாயனக் கலப்பின் தாக்கம் இருந்துவரும் நிலையில் முற்றிலும் இயற்கை முறையிலே இப்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த விபரங்களை விவசாயி பாலசுப்பிரமணியன் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்துள்ளார். இயற்கை விவசாய பயிற்சி முகாமில் விபரங்களையும் தெரிவித்துள்ளார்.
தற்போது 150 நாட்கள் முடிந்த நிலையில் இன்னும் 10 நாட்களில் இவை அறுவடை செய்யப்பட உள்ளன. இந்நிலையில் அறுவடைக்கு முன்பே பலரும் இவற்றை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இது குறித்து விவசாயி பாலசுப்பிரமணியன் கூறுகையில், “கடந்த 15ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறேன். தென்னை, கொய்யா உள்ளிட்ட எந்த பயிருக்கும் ரசாயன உரமோ, பூச்சிக்கொல்லி மருந்தோ பயன்படுத்துவதே கிடையாது.
முதல் முறையாக நெல்லிலும் இயற்கை வேளாண் முறையைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இவற்றை விளைவித்திருக்கிறேன்.
பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், மீன் அமிலம் என்று உரம், ஊக்கவளர்ச்சி, பூச்சி விரட்டி என்று அனைத்து நிலைகளுக்கும் இயற்கைப் பொருட்களையே பயன்படுத்தி இருக்கிறேன்.
நாட்டுமாடுகள், நாட்டுக்கோழி போன்றவற்றை வளர்த்து வருவதால் சாணம், ஹோமியம் உள்ளிட்டவை எளிதில் கிடைக்கிறது. அறுவடைக்கு இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில் தற்போதே இந்த நெல்லை விலைக்கு கேட்டு பலரும் தொடர்பு கொண்டு வருகின்றனர்” என்றார்.
இயற்கை வேளாண் பொருள் உற்பத்தியாளர் முருகன் கூறுகையில், “ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தாவிட்டால் விளைச்சல் எடுக்க முடியாது என்பது தவறு. கார்ப்பரேட் நிறுவனங்கள் தவறான தகவல்களைப் பரப்புகின்றன. மீன், முட்டை, கோழி கழிவுகள், வேப்பங்கொட்டை உள்ளிட்ட இயற்கையான பொருட்களை வைத்து ரசாயனத்திற்கு மாற்றாக விவசாயிகள் செயல்பட முடியும்” என்றார்.
அறுவடை செய்து விளைபொருட்களை விற்க முடியாமல் பரிதவிக்கும் விவசாயிகளுக்கு மத்தியில் மகசூலுக்கு முன்பே விலை கிடைக்கும் சூழ்நிலை இயற்கை விவசாயத்தின் மீதான ஆர்வத்தையே காட்டுகிறது.
நன்றி:இந்து தமிழ்