பழங்கள் சாகுபடி பரப்பு அதிகரிக்க திட்டம் தோட்டக்கலைத் துறை ஆலோசனை
தமிழகத்தில், பழங்கள் சாகுபடி பரப்பு அதிகரிப்பது குறித்து, தோட்டக்கலை துறையினர் ஆலோசனை நடத்தினர்.
தமிழகத்தில், மா, பலா, வாழை உள்ளிட்ட பல வகை பழங்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. பழங்களை பல்வேறு உணவுப் பொருட்களாக மாற்றி, மதிப்புகூட்டி விற்பனை செய்வதால், விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும். எனவே, பழங்கள் சாகுபடி பரப்பை அதிகரிக்க, தோட்டக்கலை துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, மத்திய அரசின் தேசிய தோட்டக்கலை இயக்கம் வாயிலாக, நிதி பெறுவதற்கான முயற்சிகள் துவங்கப்பட்டுள்ளன.
இது குறித்து, தோட்டக்கலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய பட்ஜெட்டில், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியை உயர்த்துவதற்கும், விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு அதிகரிப்பதற்கும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிதியை பெற்று, பழங்கள் சாகுபடி பரப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. பழங்களை பதப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல் போன்ற உதவிகளும் விவசாயிகளுக்கு வழங்கப்படும். பழ மரங்களை சாகுபடி செய்து, காய்கறிகளை ஊடுபயிராக சாகுபடி செய்வதால், விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இத்திட்டம் விரைவில், சென்னையை தவிர்த்து, அனைத்து மாவட்டங்களிலும் செயல்பாட்டிற்கு வரவுள்ளது. அந்தந்த மாவட்டங்களின் மண் வளத்திற்கு ஏற்ப, திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.