பயறுகள் உற்பத்தியில் தன்னிறைவு இந்தியா நெருங்கி வருகிறது
மத்திய அமைச்சர் தகவல்
பயறு வகைகள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவை நோக்கி நகர்ந்து வருவதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
பயறு வகைகளைப் பொருத்தவரை உலகின் மிகப்பெரிய நுகர்வோராகவும், இறக்குமதியாளராகவும் இந்தியா உள்ள நிலையில், உலகளவிலான தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு உற்பத்தியை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
புது தில்லியில் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தை அமைப்பு (NAFED) மற்றும் துபாயைச் சேர்ந்த உலக பயறுகள் கூட்டமைப்பு (GPC) ஆகியவை இணைந்து உலக பயறு வகைகள் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு உதவுவதற்காக குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரித்தது, பயறு வகைகளை நேரடி கொள்முதல் செய்தது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2018-19ம் பயிர் ஆண்டில், இந்தியா 23.40 மில்லியன் டன் பயறுகளை உற்பத்தி செய்தது. ஆனால் இந்தியாவின் ஆண்டு பயன்பாடு 26-27 மில்லியன் டன்னாக இருந்ததால் மீதி தேவையானது இறக்குமதி வாயிலாக பூர்த்தி செய்யப்பட்டது.
இருப்பினும் நடப்புப் பயிர் ஆண்டைப் பொருத்தவரை 26.30 மில்லியன் டன் பயறு வகைகளை உற்பத்தி செய்ய மத்திய அரசு இலக்குக் கொண்டுள்ளது. அரசின் ஆராய்ச்சி அமைப்பான இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தில் (ICAR) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வது, கொள்கை நடவடிக்கைகள் ஆகியவை கடந்த சில ஆண்டுகளில் பயறு வகைகள் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர உதவியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பயறு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவை எட்டும் நிலையை இந்தியா நெருங்கி வருவதாகவும், தற்போதைய நிலையில் தேவையில் பெரும் பங்கானது உள்நாட்டு உற்பத்தியின் வாயிலாக பூர்த்தி செய்யப்படுவதாகவும், மேலும் உற்பத்தி அதிகரிக்கப்படும் என்றும், உலகத்தின் பயறு வகை தேவையைப் பூர்த்தி செய்வதில் இந்தியாவும் உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் இயற்கை பயறு வகை ரகங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.
உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை வலுப்படுத்துவது, வர்த்தகக் கொள்கைகளை மறுசீரமைப்பு செய்வது, தனியார் முதலீடு அதிகரிப்பு, மாறுபட்ட பயறு தொடரில் பொருத்தமான பயறு வகைகளைக் கண்டறிவது ஆகியவற்றின் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார்.
பருவநிலை மாற்றம் ஒரு சவாலாக உள்ளதாகவும், இந்த நிலையில் பயறு வகைகளின் உற்பத்தியை இந்தியா அதிகரிக்க வேண்டியது அவசியம் என்றும், பயறுகள் இன்னமும் பல்வேறு நாடுகளின் உணவில் இல்லை என்றும் இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜிபிசி அமைப்பின் தலைவர் சிண்டி பிரவுன் தெரிவித்தார்.
இந்தியா தனது உபரி உற்பத்தியின் வாயிலாக இலங்கை, நேபாளம், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளின் பயறுகள் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும் என்றும் நாஃபெட் கூடுதல் மேலாண்மை இயக்குனர் எஸ்.கே.சிங் தெரிவித்தார்.
நன்றி:அக்ரி டாக்டர்