வேர்க்கடலையில் புருட்டினியா புழு வேளாண் துறை ஆலோசனை
வேர்க்கடலையில் புருட்டினியா புழுவைக் கட்டுப்படுத்த வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
கண்டமங்கலம் வேளாண் உதவி இயக்குநர் பெரியசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் வட்டாரத்தில் பள்ளிப்புதுப்பட்டு, திருமங்கலம், பூவரசங்குப்பம், மிட்டாமண்டகப்பட்டு, கோண்டூர், ஏ.மாத்துார் கிராமங்களில் 100 எக்டரில் வேர்க்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வேர்க்கடலையில் அதிக மகசூல் பெற தடையாக இருப்பது புருட்டினியா புழு தாக்குதல் ஆகும். இந்த புழுக்கள் நீளமாக, பருத்து, உடம்பில் பழுப்பு நிறத்திலான புள்ளிகளுடன் காணப்படும்.
தொடக்க நிலையில் புழுக்கள் கூட்டமாக இலைகளை சுரண்டித் தின்னும். இப்புழுவின் தாக்குதல் அதிகமாகும் போது இலைகளில் நரம்பு மட்டுமே இருக்கும். வளர்ந்த புழுக்கள் பகலில் செடிகளின் அருகே மண்ணுக்குள் வாழும். இரவில் வெளியே வந்து இலைகளை உட்கொண்டு சேதம் விளைவிக்கும்.இதன் தாக்குதலை ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை கடைபிடித்து கட்டுப்படுத்த வேண்டும். நிலக்கடலை பயிரிடுவதற்கு முன்னதாக கோடை உழவு செய்ய வேண்டும். ஆமணக்குச் செடியை வயலில் ஓரத்தில் வளர்த்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
ஏக்கர் ஒன்றுக்கு 5 விளக்கு பொறிகள் வைத்து தாய் அந்துப்பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கலாம். ஏக்கர் ஒன்றுக்கு 2 இனக்கவர்ச்சி பொறிகள் அமைத்து ஆண் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். முட்டை குவியல்களையும், இளம் புழுக்களையும் சேகரித்து அழிக்கலாம்.ஏக்கர் ஒன்றுக்கு 10 இடங்களில் பறவை இருக்கைகள் அமைக்கலாம். என்.பி.வி. வைரஸ் என்ற ஸ்போடாப்டிராவை, ஒரு ஏக்கருக்கு 100 புழுக்கள் என்னும் அளவில் ஒட்டும் திரவம் கொண்டு மாலை வேளையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.
ஏக்கர் ஒன்றுக்கு அரிசி தவிடு 5 கிலோ, வெல்லம் 500 கிராம், தையோடிகார்ப் 200 கிராம் இவற்றுடன் 3 லிட்டர் நீர் சேர்ந்த கலவையாக நச்சுத்தீனி உருண்டைகளாக சேர்த்து மாலை வேளையில் வயலிலும் வரப்பிலும் வைத்து வளர்ந்த புழுக்களை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது
நன்றி:அக்ரி டாக்டர்