மண்வள அட்டை பயன்பாட்டால் உர பயன்பாடு குறைந்தது ஆய்வுத் தகவல்
நாடு முழுவதும் மண்வள அட்டைகளின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் ரசாயன உரங்களின் பயன்பாடு 10 சதவீதம் வரை குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
மண்வள அட்டைகள் தொடர்பாக அளிக்கப்பட்ட பரிந்துரைகளால் ரசாயன உரங்களின் பயன்பாடு 8-10 சதவீதம் குறைந்துள்ளதாக தேசிய உற்பத்தித் திறன் கவுன்சில் (NPC) மேற்கொண்ட ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரங்களின் பயன்பாடு குறைந்துள்ளதுடன் உற்பத்தித் திறனும் 5-6 சதவீதம் அதிகரித்துள்ளதாக அது தொடர்பான ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014-15ம் ஆண்டில் மோடி அரசால் மண்வள அட்டை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மண்ணில் ஊட்டச் சத்து குறைவாக இருக்கும் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கத்தில் இந்தத் திட்டம் கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அந்தத் திட்டத்தில் பலன் கிடைக்கத் துவங்கியுள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் 11.69 கோடி மண்வள அட்டைகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் மண்ணின் தன்மைக்கான குறியீடுகளை விவசாயிகள் அறிந்து கொள்ள முடிவதாகவும், அத்துடன் தேவையான ஊட்டச் சத்துக்களை சரியாக பயன்படுத்துவதன் வாயிலாக உற்பத்தித் திறனை அதிகரிக்க முடிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்வள அட்டை திட்டத்தின் முதல் காலகட்டமான 2015-17ல் 10.74 கோடி அட்டைகளும், இரண்டாவது காலகட்டமான 2017-19ல் 11.69 கோடி அட்டைகளும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
நடப்பு நிதியாண்டில் மாதிரி கிராம உருவாக்கம் என்ற திட்டம் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது. பயிரிடும் மண்ணின் மாதிரிகளை சேகரிக்கவும், சோதனை செய்யவும் விவசாயிகளுடன் கூட்டுறவு அமைக்க ஊக்குவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் மண் மாதிரிகளை தொகுப்பதற்கும், சாகுபடி நிலங்களை பகுப்பாய்வு செய்யவும் மாதிரி கிராமம் தெரிவு செய்யப்படும்.
மேலும் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக 2019-20ம் நிதியாண்டில் தற்போது வரை 13.53 லட்சம் மண்வள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் மண்வள ஆய்வகங்களை அமைப்பதற்காக 429 இருப்பிட ஆய்வகங்களையும், 102 மொபைல் ஆய்வகங்களையும் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 8752 சிறிய ஆய்வகங்களையும், 1,562 கிராம அளவிலான ஆய்வகங்களை அமைக்கவும், ஏற்கனவே உள்ள 800 ஆய்வகங்களை மேம்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மண்ணின் ஊட்டச்சத்து கலப்பு விகிதத்தை மாநில அரசுகள் பகுப்பாய்வு செய்து, அதன் அடிப்படையில் மண்ணின் வளத்தை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். விவசாயிகள் தங்கள் மண் மாதிரிகளை பின் தொடரலாம் என்றும், மண்வள அட்டை அறிக்கையைப் பெறமுடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தத் திட்டத்தின் கீழ், 40 வயது வரையிலான கிராம இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் மண் வள ஆய்வகங்களை உருவாக்கவும், சோதனையை மேற்கொள்ளவும் தகுதி பெற்றவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆய்வகத்தை உருவாக்கிட ரூ.5 லட்சம் வரை செலவு பிடிக்கும். இதில் 75 சதவீதம் தொகையை மத்திய மற்றும் மாநில அரசுகள் பங்களிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:அக்ரி டாக்டர்