யானைகளிடமிருந்து பயிர்களை காக்கும் ஆமணக்கு செடி விவசாயிகளின் புதிய முயற்சி
கோவனூர் மலையடிவாரத்தில் யானைகளின் வரவை தடுக்க, விவசாயிகள் ஆமணக்கு பயிரிட்டுள்ளனர். கோவை வடக்கு, புறநகர் பகுதிகளில், காட்டு யானைகளின் நடமாட்டம், தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
யானைகளின் வரவை கட்டுப்படுத்த அகழி அமைத்தல், பேட்டரி மின்சார வேலி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை, வனத்துறை மேற்கொண்டது. ஆனாலும், யானைகளின் வரவை, முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை. இதனால், கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்ட விவசாயம் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது. யானைகளின் வரவை, எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என, விவசாயிகளும், பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர்.
யானைகள் விரும்பாத அவரை, மஞ்சள், ஆமணக்கு உள்ளிட்ட பயிர் ரகங்களை பயிரிட, விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை மலையடிவாரத்தில் யானைகள் விரும்பாத, ஆமணக்கு செடிகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ஆமணக்கின் சுவை, ஒருவித எண்ணை வாசனையுடன், துவர்ப்பு நிலையில் இருக்கும். இதனால், யானைகள் இதை உண்பதை வெறுக்கும். இச்செடிகள் பயிரிட்டுள்ள பகுதியில் உள்ளே நுழைவதை விரும்பாது. இதனால், ஆமணக்கு செடிகளை பயிரிட்டு உள்ளோம். இவை, தற்போது எவ்வித பாதிப்பும் இல்லாமல், வேகமாக வளர்ந்து வருகிறது. இதில், ஓரளவு லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.
நன்றி:அக்ரி டாக்டர்