சூரியசக்தி மின்மோட்டார் அமைக்க 90% மானியம் குமரி மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள், சூரிய சக்தியால் இயங்கும் மின்மோட்டார்கள் அமைக்க 90 சதவீத மானியத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சூரிய சக்தியால் இயங்கும் மின்மோட்டார் அமைக்கும் திட்டம் 2014ல் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 5, 7.5, 10 ஆகிய குதிரைத்திறன் கொண்ட மின் கட்டமைப்புடன் இணைக்கப்படாத 1000 சூரிய மின் சக்தி நீர் பம்புகள் அமைப்பதற்கு விவசாயிகளிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், தமிழக அரசின் 40 சதவீத மானியம், மத்திய அரசின், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் 20 சதவீத மானியம், தமிழ்நாடு மின் உற்பத்தி – பகிர்மான கழகத்தின் 30 சதவீத மானியம் ஆகியவற்றுடன் விவசாயிகளின் பங்களிப்பாக, 10 சதவீதம் என்ற அடிப்படையில் மூலதனம் இருக்கும்.
இத்திட்டத்தின் கீழ் 2014-19 காலக்கட்டத்தில் 101 விவசாயிகளுக்கு ரூ. 2 கோடியே 67 லட்சம் மானியத்தில் சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
கடந்த 5 ஆண்டுகளாக சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் விவசாயிகளுக்கு 80 சதவீதமாக இருந்த மானியம் நிகழாண்டு முதல் 90 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள், ஏற்கெனவே இலவச விவசாய மின் இணைப்பு பெற்றிருந்தால் அதை துண்டிப்பதற்கு விருப்ப கடிதம் வழங்க வேண்டும். இலவச மின் இணைப்பு விண்ணப்பித்திருந்தால், அதற்கான ரசீத தங்களது விண்ணப்பங்களுடன் இணைத்து, வாபஸ் கடிதம் அனுப்ப வேண்டும்.
திறந்தவெளி கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர் எடுக்க விரும்பினால் வேளாண் பொறியியல் துறையால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை தேர்வு செய்து மானிய உதவியுடன் சூரிய சக்தி பம்புசெட் அமைத்துக் கொள்ளலாம்.
இதற்கான விண்ணப்பத்தை, விவசாயிகள், சம்பந்தப்பட்ட உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். அதை பூர்த்தி செய்து, கடவுச்சீட்டு அளவு புகைப்படம் 2, ஆதார் அட்டையின் நகல், சிட்டா அடங்கல் நகல், புல வரைபட நகல் ஆகிய ஆவணங்களை இணைத்து, வேளாண்மைப் பொறியியல் துறையின், உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, 833, தொழிற்பேட்டை, கோணம், நாகர்கோவில், உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை, மேட்டுக்கடை, தக்கலை ஆகிய முகவரிகளில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, தொலைபேசி எண்கள் 04652 – 260181 (நாகர்கோவில்), 04651 – 250181 (தக்கலை) ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:அக்ரி டாக்டர்