50 சதவீத மானியத்தில் பருத்தி அறுவடை இயந்திரம்
ஒட்டன்சத்திரம் பகுதி விவசாயிகளுக்கு பருத்தி அறுவடை இயந்திரம் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது என வேளாண்மை துறையினர் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டாரத்தில் நடப்பாண்டில் சுமார் 2800 ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பருத்தி செடியின் பஞ்சு எடுக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பருத்தி அறுவடை இயந்திரம் மானியத்தில் வழங்கப்படவுள்ளது. பருத்தி அறுவடை செய்வதற்கு அதிக கூலி கொடுத்தாலும், கூலி ஆட்கள் கிடைக்கவில்லை என்பது விவசாயிகளின் கருத்தாக உள்ளது. இதை தடுக்க பருத்தி அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி கழகம் சார்பில் பருத்தி அறுவடை இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்து. இந்த இயந்திரமானது 12 வோல்ட்டு மின்சாரத்தை சேமித்து வைத்து, 8 மணி நேரம் வேலை செய்யக்கூடியதாகும். தொழிலாளர்கள் கையாளும் வகையில் 600 கிராம் எடையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேட்டரியை தாங்கிய மைய இடுப்பு பகுதியில் கச்சையில் இருக்கமாக அணிந்து கொண்டு, பருத்தி சேகரிக்கும் பையை இடுப்பில் பின்பக்கம் இருக்குமாறு கட்டி, விசை பட்டனை அழுத்தினால் பருத்தி கருவியால் இழுக்கப்பட்டு, பையில் சேகரிக்கப்படும் இத்தகைய அறுவடையில் இலைச்சருகல் சேராது. ஒரு நபர் ஒரு மணி நேரத்திற்கு 15 கிலோ முதல் 20 கிலோ பருத்தி எடுக்க முடியும்.
இக்கருவியானது பேட்டரி மூலம் செயல்படுவதால் சார்ஜ் செய்யும் வசதியுடன் இதர உபகரணங்களும் ஒரு வருட வாரன்டியுடன் வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்துவதன் மூலம் ஆட்சூல் சேமிக்கப்பட்டு, விவசாயிகள் அதிக லாபம் ஈட்ட வழிவகை செய்யப்படுகிறது. வேளாண்மை துறையின் மூலம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் (பருத்தி) 2019 – 2020-ன் கீழ் 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.3500 மானியத்தில் இக்கருவி வழங்கப்படுகிறது. இதன் முழு விலை ரூ.7,840 ஆகும். எனவே இக்கருவி தேவைப்படும் விவசாயிகள் ஒட்டன்சத்திரம் வேளாண்மை துறையினரை அணுகி மானிய விலையில் பெற்று கொள்ளுமாறு வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.
நன்றி:அக்ரி டாக்டர்