வேளாண் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நவீன முறைகளைக் கண்டறிய வேண்டும் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்
வேளாண் தொழிலில் உள்ள பிரச்சினைகளுக்கு நவீன நடைமுறைகளைப் பின்பற்றி தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி விஞ்ஞானிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குஜராத் மாநிலம் காந்தி நகரில் 3வது உலக உருளைக்கிழங்கு மாநாட்டை பிரதமர் செவ்வாய்க் கிழமை (ஜன.28) காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். முந்தைய இரண்டு உலக உருளைக்கிழங்கு மாநாடுகள் 1999 மற்றும் 2008-ல் நடைபெற்றது. புதுதில்லி இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் மற்றும் இந்த கவுன்சிலுக்கு உட்பட்ட சிம்லாவில் உள்ள மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையம் மற்றும் பெரு நாட்டின் லிமாவில் உள்ள சர்வதேச உருளைக்கிழங்கு மையம் ஆகியவற்றின் ஆதரவுடன் இந்திய உருளைக்கிழங்கு சங்கத்தால் இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் இருந்து வந்துள்ள உருளைக்கிழங்கு விவசாயிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர், உலக உருளைக்கிழங்கு மாநாட்டில் பங்கேற்று, வரும் நாட்களில் தேவைப்படும் உணவு மற்றும் ஊட்டச்சத்து சார்ந்த முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கவுள்ளனர்.
மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, உருளைக்கிழங்கு மாநாடு, வேளாண் கண்காட்சி மற்றும் உருளைக்கிழங்கு சாகுபடி குறித்த கள தினம் ஆகிய மூன்றும் ஒரே நேரத்தில் நடைபெறுவது இந்த மூன்றாவது உலக உருளைக்கிழங்கு மாநாட்டின் முக்கிய அம்சமாகும். கள தினத்தன்று சுமார் 6,000 விவசாயிகள் களப் பயணம் மேற்கொள்ள இருப்பது பாராட்டத்தக்க முயற்சி என்றும் அவர் குறிப்பிட்டார்.
3வது உலக உருளைக்கிழங்கு மாநாடு, நாட்டில் உருளைக்கிழங்கு சாகுபடி மற்றும் உற்பத்தியில் முன்னணி மாநிலமாக திகழும் குஜராத்தில் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்தது என்று பிரதமர் குறிப்பிட்டார். கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவில் உருளைக்கிழங்கு சாகுபடி பரப்பு 20% அதிகரித்துள்ள நிலையில், அதே காலக்கட்டத்தில் குஜராத்தில் 170% அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
சாகுபடிக்கு தெளிப்புநீர் மற்றும் சொட்டு நீர் பாசனமுறைகள் போன்ற நவீன வேளாண் சாகுபடிகளை மேற்கொள்வதோடு, குளிரூட்டப்பட்ட சேமிப்பு வசதிகள் மற்றும் உணவுப் பதப்படுத்தும் தொழிற்சாலைகளுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள இணைப்பு உள்ளிட்ட அரசின் கொள்கை முன்முயற்சிகள் மற்றும் முடிவுகளே, சாகுபடி அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்றும் பிரதமர் தெரிவித்தார். குஜராத் மாநிலத்தில் தற்போது அதிக அளவிலான உருளைக்கிழங்கு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருவதை எடுத்துரைத்த அவர். உருளைக்கிழங்கு ஏற்றுமதியாளர்களில் பெரும்பாலோனோர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறினார். இதுவே நாட்டின் உருளைக்கிழங்கு உற்பத்திக் கேந்திரமாக இந்த மாநிலம் உருவெடுக்க காரணமாக அமைந்தது எனறும் அவர் தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கு என்ற இலக்கை நோக்கி அரசு விரைவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். விவசாயிகளின் முயற்சிகள் மற்றும் அரசாங்க கொள்கைகளின் இணைப்புத் தன்மை காரணமாக, பல்வேறு வகையான தானியங்கள் மற்றும் பிற உணவுப்பொருட்களின் உற்பத்தியில் உலகின் 3வது இடத்தில் இந்தியா இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். 100% அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிப்பது, மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தியில் உதவுவது மற்றும் பிரதமரின் விவசாயிகளுக்கான ஆதரவு திட்டத்தின்கீழ், மதிப்புக் கூட்டப்பட்ட மற்றும் மதிப்பு சங்கிலி மேம்பாட்டுத் திட்டம் போன்றவற்றை உணவுப்பதப்படுத்தும் தொழில் துறையை அனைத்து மட்டங்களிலும் ஊக்குவிக்க ஏதுவாக தமது அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த மாத முற்பகுதியில், 6 கோடி விவசாயிகளுக்கு நேரடி பணப் பரிமாற்றத் திட்டம் வாயிலாக அவர்களது வங்கிக் கணக்குகளில் ரூ.12,000 கோடி அளவுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதன் மூலம் புதிய சாதனை படைக்கப்பட்டு இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் இடையேயான இடைத் தரகர்களின் ஆதிக்கத்தை குறைப்பதே தமது அரசின் முன்னுரிமைப் பணி என்றும் அவர் குறிப்பிட்டார்.
வேளாண் தொழில்நுட்பம் சார்ந்த புதிய தொழில்களை ஊக்குவிக்க அரசு முன்முயற்சி எடுத்து வருவதன் மூலம் விவசாயிகள் பற்றிய புள்ளிவிவரங்கள் மற்றும் வேளாண் விளைபொருள் சேமிப்புக்கு, நவீன மற்றும் சிறப்பு வாய்ந்த வேளாண் நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
வேளாண் தொழிலில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு, நவீன உயிரி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, தடுப்புச் சங்கிலி, ட்ரோன் தொழில்நுட்பம் போன்றவற்றை பயன்படுத்தி தீர்வுகாண விஞ்ஞானிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதமர் கேட்டுக் கொண்டார். நாட்டில் உள்ள யாரும் பட்டினி அல்லது ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படாத வகையில், உறுதி செய்வது விஞ்ஞானிகள் மற்றும் அரசின் கொள்கை வகுப்போரின் பெரும் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.
இவ்வாறு மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:அக்ரி டாக்டர்
Comments are currently closed.