வெங்காயம் உற்பத்தி அதிகரித்து, பழங்களின் உற்பத்தி சரியும் மத்திய வேளாண் அமைச்சகம் தகவல்
நடப்பு பயிர் பருவத்தில் ஒட்டுமொத்த அளவில் வெங்காயம் உற்பத்தி 7 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது. அதேநேரம் பழங்களின் உற்பத்தி சரியும் எனவும் தெரிவித்தது.
இதுகுறித்து மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்ட முதல்கட்ட மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : நடப்பு 2019-20ம் பயிர் பருவத்தில் (ஜூலை-ஜூன்) நாடு தழுவிய அளவில் வெங்காயத்தின் மொத்த உற்பத்தி 2.44 கோடி டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, முந்தைய பயிர் பருவ உற்பத்தியான 2.28 கோடி டன்னைக் காட்டிலும் 7 சதவீதம் அதிகமாகும்.
அதேபோன்று வெங்காயம் பயிரிடும் பரப்பும் 12.20 லட்சம் ஹெக்டேரிலிருந்து 12.93 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இது, வெங்காயத்தின் விலை உயர்வால் கடந்த சில மாதங்களாக பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு பெரிய நிவாரணமாக இருக்கும்.
வெங்காயத்தை அடுத்து சமையலில் முக்கிய அங்கம் வகிக்கும் உருளைக்கிழங்கின் உற்பத்தி நடப்பு பருவத்தில் 5.01 கோடி டன்னிலிருந்து 5.19 கோடி டன்னாகவும், தக்காளி விளைச்சல் 1.9 கோடி டன்னிலிருந்து 1.93 கோடி டன்னாகவும் அதிகரிக்கும்.
இவ்வாறு காய்கறிகளின் உற்பத்தி அதிகரித்த போதும், பீன்ஸ், கோவக்காய், பூசணி, மரவள்ளிக்கிழங்கு ஆகியவற்றின் உற்பத்தி சரிவடையும். இருப்பினும், ஒட்டு மொத்த காய்கறிகளின் உற்பத்தி நடப்பு 2019-20 பயிர் பருவத்தில் 18.3 கோடி டன்னிலிருந்து 18.80 கோடி டன்னாக அதிகரிக்கும்.
காய்கறிகளின் உற்பத்தி அதிகரிக்கும் அதேநேரம், மாம்பழம், வாழைப்பழம், திராட்சை, மாதுளை உள்ளிட்ட முக்கிய பழங்களின் உற்பத்தி குறையும். அதன்படி, மாம்பழம் உற்பத்தி 2.13 கோடி டன்னிலிருந்து 2.12 கோடி டன்னாகவும், வாழைப்பழம் உற்பத்தி 3.04 கோடி டன்னிலிருந்து 2.96 கோடி டன்னாகவும், திராட்சை உற்பத்தி 30 லட்சம் டன்னிலிருந்து 21.5 லட்சம் டன்னாகவும், மாதுளை உற்பத்தி 29.1 லட்சம் டன்னிலிருந்து 23.2 லட்சம் டன்னாகவும் சரியும்.
அதேசமயம், சாதகமான கால சூழல் நிலவுவதால் ஆப்பிள் உற்பத்தி 23.1 லட்சம் டன்னிலிருந்து 27.3 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என மத்திய வேளாண் அமைச்சக மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றிஅக்ரி டாக்டர்