வெப்பம் உயர்வால் கால்நடைகளுக்கு அயற்சி ஏற்படும் வானிலை ஆய்வு மையம்
இரவு வெப்பம் குறைந்து, பகல் நேர வெப்பம் உயர்வால் கோழிகள் மற்றும் கறவை மாடுகள் அயற்சியினால் பாதிக்கப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் நான்கு நாள்களும் வானம் தெளிவான மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கான வாய்ப்பில்லை. காற்று மணிக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் கிழக்கில் இருந்து வீசும். வெப்பநிலை அதிகபட்சமாக 91.4 டிகிரியும், குறைந்தபட்சம் 64.4 டிகிரியுமாக இருக்கும்.
பகல் வெப்பம் அதிகரித்தும், இரவில் வெப்பம் சற்றுக் குறைந்தும் பனியுடன் காணப்படும். ஜனவரி மாதத்தின் கடைசி வாரத்திலும் இதே நிலை நீடிக்கும். பின் பனிக்காலத்தில் வெப்ப அளவுகள் உயர்வதும், குறைவதும் இயல்பானது தான். இவ்வாறான வானிலையில், கோழிகள் மற்றும் கறவை மாடுகள் அயற்சியினால் பாதிக்கப்படும். கோழிகளில் அதிக தீவன எடுப்பு, முட்டை உற்பத்திக் குறைபாடு ஆகியவற்றை காணலாம். கோழிகளுக்கான தீவனத்தில் தாவர எண்ணெய் டன்னுக்கு 5 கிலோ சேர்ப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:அக்ரி டாக்டர்