சின்ன வெங்காயத்திற்கான விலை முன்னறிவிப்பு தமிழ்நாடு வேளாண் பல்கலை. பரிந்துரை
சின்ன வெங்காயம், தென்னிந்தியாவின் மிக முக்கியமான சமயலறை பொருளாகும். உலகளவில், மொத்த வெங்காய உற்பத்தியில் 18 சதவீதம் பங்களிப்பதன் மூலம் சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில், வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் மூன்றாவது முன் கூட்டிய மதிப்பீட்டின் படி, 2018 -19 ஆண்டில், சின்ன வெங்காயம் 0.28 இலட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 3.01 இலட்சம் டன்கள் உற்பத்தி தமிழ்நாட்டில் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கர்நாடக, ஆந்திரபிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய பகுதிகளில் அதிகளவு சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. சின்ன வெங்காயத்தின் சாகுபடி மற்றும் வர்த்தகத்தில் தமிழ்நாட்டிற்கு முக்கிய போட்டியாளராக கர்நாடகா உள்ளது.
தமிழ்நாட்டில், மொத்த வெங்காய பரப்பளவில் 80 சதவீதத்திற்கும் மேல் சின்ன வெங்காயமும் மீதம் பெல்லாரி வெங்காயமும் பயிரிடப்படுகின்றது. திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலு}ர், திருச்சி, நாமக்கல், தேனி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் சின்ன வெங்காயத்தை அதிகளவு பயிரிடுகின்றனர்.
வர்த்தக மூலங்களின் படி, கர்நாடக மற்றும் ஆந்திரபிரதேசத்தில் பருவமழை மற்றும் அதனை தொடர்ந்து பயிர் செயலிழப்பால் வெங்காயத்தின் வரத்து தமிழ்நாட்டு சந்தையில் குறைந்துள்ளது. மேலும், ஜுலை மற்றும் அக்டோபர் மாதங்களில் தமிழ்நாட்டில் விதைக்கப்பட்ட பயிர்கள் பூச்சி மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது. அவை நீடித்த பருவ மழையினால் மேலும் மோசமடைந்து சின்ன வெங்காயத்திற்கான விலை உயர்வை தூண்டியுள்ளது. நடப்பாண்டின் பயிர் அறுவடை மற்றும் கர்நாடக வரத்து ஆகியவை மார்ச் 2020ல் சின்ன வெங்காயத்தின் விலையை குறைக்க வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
இச்கசூழலில், விவசாயிகள் முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 12 ஆண்டுகளாக திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்ன வெங்காய விலையை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.
ஆய்வுகளின் அடிப்படையில், வரும் மார்ச் 2020 மாத இறுதி வரை தரமான சின்ன வெங்காயம் சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ.50 முதல் 60 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், கர்நாடகவிலிருந்து வரும் வரத்தை பொறுத்து சின்ன வெங்காயத்தின் விலையில் மாற்றங்கள் இருக்கும்.
எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில், விதைப்பு மற்றும் அறுவடை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு, கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், தொலைபேசி எண்: 0422-2431405 என்ற எண்ணிலும், தொழில்நுட்ப விவரங்களுக்கு, காய்கறிப் பயிர்கள் துறை,
பேராசிரியர் மற்றும் தலைவர், தொலைபேசி எண்: 0422-6611374 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:அக்ரி டாக்டர்