சத்து மிகுந்த ஹைட்ரோபோனிக்ஸ் கால்நடை தீவனம் குறைந்த இடம், தண்ணீர் போதுமானது
குறைந்த பரப்பளவில், சிக்கனமான தண்ணீர் செலவில் கால்நடைகளுக்கு சத்தான தீவனம் தயாரிக்கும், ஹைட்ரோபோனிக்ஸ் முறையை கால்நடை வளர்ப்போர் கையாண்டு பயன்பெறலாம். ஹைட்ரோபோனிக்ஸ் தீவன வளர்ப்பு என்பது, மண்ணில்லாது, தண்ணீரை மட்டும் கொண்டு மிக குறைந்த காலத்திலான தீவன பயிர் வளர்ப்பு முறையாகும்.
இம்முறையில், மிக்குறைந்த இட வசதியில் பசுந்தீவன உற்பத்தி செய்யலாம். தண்ணீர் தேவை மிகவும் குறைவு. வறட்சி காலத்தில் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் வழங்க ஏதுவாகும். இவ்வகையில் உற்பத்தி செய்யப்படும் தீவனம், எளிதில் செரிமானமாக கூடியது. தீவனங்களில் மண், குச்சி போன்றவை இல்லாததால் கால்நடைகள் விரும்பி உண்ணும்.
இது குறித்து கால்நடைத்துறை அதிகாரிகள் கூறியதாவது : ஹைட்ரோபோனிக்ஸ் தீவன வளர்ப்புக்கு, வெளிச்சம் குறைவான சிறிய அறை தேவை. அறையின் வெப்பநிலை 24 – 25 டிகிரி வரை இருக்க வேண்டும். காற்றில் ஈரப்பதம் 80 – 85 சதவிகிதம் இருக்க வேண்டும். சிறிய பிளாஸ்டிக் டிரேக்களின் அடியில் சிறிய ஓட்டை போட்டுக் கொள்ள வேண்டும். மக்காச்சோளம், கோதுமை, சோளம், கொள்ளு, பார்லி விதைகளை டிரேக்களில் தூவி தீவனம் வளர்க்கலாம். ஒன்றரை சதுர அடி பரப்பளவுள்ள பிளாஸ்டிக் டிரே ஒன்றுக்கு, 300 கிராம் மக்காச்சோள விதை போதுமானதாகும். விதைகளை நன்கு கழுவி, ஒரு நாள் ஊற வைக்க வேண்டும். ஊறிய விதையை சணல் சாக்கில் கட்டி, 24 மணி நேரத்துக்கு இருட்டில் வைக்க வேண்டும். 24 மணி நேரம் கழித்து பார்த்தால், விதைகளில் சிறு முளை விட்டிருக்கும். முளைவிட்ட விதைகளை பிளாஸ்டிக் தட்டுகளில், தட்டு ஒன்றுக்கு, 300 கிராம் வீதம், இடைவெளியின்றி ஒரு விதை மேல் இன்னொரு விதை விழாத வகையில் பரப்பி சில நிமிடங்கள் காற்றோட்டமாக வைக்க வேண்டும். பிறகு, தட்டுக்களை வளர்ப்பு அறையில் உள்ள ஸ்டாண்டில் அடுக்கி வைத்து, தண்ணீரை புகை போல் தெளிக்க வேண்டும். விதைகளில் எப்போதும் ஈரப்பதம் இருக்க வேண்டும். மண் இல்லாத தீவன பயிருக்கு தண்ணீரின் தேவை மிக குறைவு தான். ஆனால் அடிக்கடி தண்ணீர் தெளிப்பது மிகவும் அவசியம்.
எட்டு நாட்களில் நாற்று போன்ற பசுந்தீவனம் விளைந்திருக்கும், இந்த ஹைட்ரோபோனிக்ஸ் தீவனம் சுவை கொண்டது என்பதால், எருமைக்கு 15 – 20 கிலோவும் ஆடுகளுக்கு ஒன்று – இரண்டு கிலோவும் அளிக்கலாம். பொதுவாக ஒரு கிலோ தானியத்துக்கு ஆறு – ஏழு கிலோ தீவனம் பெற முடியும். இதன் மூலம் கால்நடைகளுக்கு சத்தான தீவனம் கிடைக்கும்.
கால்நடை பராமரிப்புத் துறை மூலம் செயல்படுத்தப்படும் மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஹைட்ரோபோனிக்ஸ் தொழில்நுட்பம் அமைக்கும் செலவில், 75 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. ஒரு மாதத்திற்கு தேவையான விதைக்கான செலவில், 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. குறைந்த பட்சம், 40 சதுர அடி பரப்புள்ள மின் வசதியுடன் கூடிய நிலமும், குறைந்த பட்சம் இரண்டு மாடுகளும் இருக்க வேண்டும். சிறு குறு விவசாயிகள், ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.
நன்றி:அக்ரி டாக்டர்