விவசாயிகள் முந்திரி சாகுபடி செய்ய விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை, ஜன.20
முந்திரி சாகுபடி செய்ய விரும்பும் சிவகங்கை வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறையின் சிவகங்கை வட்டார உதவி இயக்குநர் ஜெ. ஐஸ்வர்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சிவப்பு மண் அதிகளவில் இருப்பதால் முந்திரி சாகுபடிக்கு ஏற்ற நிலமாக உள்ளது. ஏற்கனவே சிவகங்கை வட்டாரத்தில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் முந்திரி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வறட்சியினை தாங்கி வளரக் கூடியது மட்டுமின்றி, இனி வரும் காலங்களில் விவசாயிகளுக்கு அதிகளவு லாபம் கிடைக்கும் என்பதால் முந்திரி பயிர் சாகுபடி பரப்பை அதிகரித்திட தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 40 சதவிகித மானியத்தில் முந்திரி சாகுபடி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
எனவே மேற்கண்ட திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் சிவகங்கை வட்டார விவசாயிகள் தங்களது நில உடைமை ஆவணங்களுடன் சிவகங்கையில் உள்ள வட்டார தோட்டக் கலைத் துறை அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:அக்ரி டாக்டர்