தென்னையில் ஊடுபயிராக ஜாதிக்காய் சாகுபடியில் செய்து வருமானம் ஈட்டலாம் தோட்டக்கலைத்துறை அறிவுரை
கோவை மாவட்டம், ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. தென்னையில் கூடுதல் வருமானத்துக்காகவும், உரத்துக்காகவும் ஊடுபயிர்கள் சாகுபடி செய்கின்றனர். பெரும்பாலானோர் கோகோ பயிரை ஊடுபயிர் செய்கின்றனர்.
சொற்ப அளவிலான விவசாயிகள் மட்டுமே, ஜாதிக்காய் ஊடுபயிராக சாகுபடி செய்கின்றனர். ஜாதிக்காய் சாகுபடி குறித்து, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கி உள்ளனர். இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஜாதிக்காயை தென்னையில் ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் சாகுபடி செய்யலாம். வாழை, கோகோ போல, ஜாதிக்காயை ஊடுபயிராக சாகுபடி செய்வது எளிது. நான்கு தென்னை மரத்துக்கு மத்தியிலும், மூன்று தென்னை மரத்துக்கு மத்தியிலும், ஒரு ஜாதிக்காய் மரம் சாகுபடி செய்யலாம். தென்னைக்கு வழங்கும் தண்ணீர், உரங்களை கிரகித்து ஜாதிக்காய் மரம் செழிப்பாக வளரும். அதிக அளவில் உரம் பயன்படுத்த தேவையில்லை. ஜாதிக்காய் மரங்கள் நடவு செய்த, இரண்டு ஆண்டுகளிலேயே காய்கள் அறுவடை செய்ய முடியும். ஆறு ஆண்டுகளை கடந்ததும் நல்ல மகசூல் கிடைக்கும். எட்டு முதல் ஒன்பது மாதத்துக்கு ஒரு முறை ஜாதிக்காய் அறுவடை செய்யலாம்.
ஒரு மரத்துக்கு ஒரு முறை அறுவடை செய்தால், எட்டு கிலோ வரையில் உலர்ந்த ஜாதிக்காய், மூன்று கிலோ வரையில் பூ கிடைக்கும். ஒரு கிலோ பூ, ரூ.1,700 – 2,000 வரையிலும், உலர்ந்த காய் ஒரு கிலோ, ரூ.400 வரையிலும் விற்பனை செய்ய முடியும். ஒரு அறுவடையில் ஒரு மரத்துக்கு செலவுகள் போக, ரூ.3000 வரை வருமானம் ஈட்டலாம். சந்தையில், ஜாதிக்காய் மற்றும் பூ ஆகியவற்றுக்கு, அதிக தேவை உள்ளது, எளிதாக சந்தைப்படுத்த முடியும். எனவே, விவசாயிகள் ஜாதிக்காய் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என தெரிவித்தனர்.
நன்றிஅக்ரி டாக்டர்