தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல்: இலவசமாக ஒட்டுண்ணி வழங்கல்
உடுமலை:குடிமங்கலம் வட்டாரத்தில், 112 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இம்மரங்களில், தற்போது வெள்ளை ஈ தாக்குதல் அதிகரித்துள்ளது. தென்னை ஓலையின் அடிப்பகுதியில் இருந்து கொண்டு, சாற்றை உறிஞ்சி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.ஈக்கள் அதிகளவு முட்டையிட்டு, 30 நாட்களில் அபரிமிதமாக பெருகி, பச்சையத்தை உறிஞ்சி, ஓலையின் மீது பூஞ்சாணம் போல் படிந்து விடுகிறது.
தென்னை மரங்கள் ஒளிச்சேர்க்கை செய்ய வழியில்லாமல், மகசூலும், மரங்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்துவது குறித்து, குடிமங்கலம் வேளாண் உதவி இயக்குனர் பொம்முராஜூ கூறியதாவது:மழை முடிந்து, வெயில் காலம் துவங்கியுள்ளதால், வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. தென்னை விவசாயிகள் இதனை கவனிக்க வேண்டும். மட்டைகளின் கீழ் தங்கி, சாற்றை உறிஞ்சி, ஒளிச்சேர்க்கையை தடுத்து, மகசூல் பாதிக்கிறது.வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, பொள்ளாச்சி, ஆழியார் நகர் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், என்கார்சியா ஒட்டுண்ணிகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
தேவைப்படும் விவசாயிகள், அங்கு சென்று சிட்டா வழங்கி பெற்றுக்கொள்ளலாம். மேலும், கோவை வேளாண் பல்கலை, பூச்சியியல் துறையில் உற்பத்தி செய்யப்படும், சிரைசோபா எனும், இரை விழுங்கிகள், வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தும்.கிரீஸ் மற்றும் விளக்கெண்ணெய் தடவிய மஞ்சள் நிற ஒட்டுப்பொறிகளை பயன்படுத்தி, இப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். இரவு நேரங்களில், விளக்கு பொறிகளை அமைத்து, வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம்.மேலும், விவரங்களுக்கு வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, உதவிஇயக்குனர் கூறினார்.
நன்றி:தினமலர்