சம்பா நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள்
அன்பார்ந்த விவசாயிகளே,
சம்பா நெல் பயிர், அறுவடை நிலையில் உள்ளது அனைவரும் அறிந்ததே. இத்தருணத்தில் மகசூல் இழப்பு ஏற்படுவதற்கு சில காரணங்கள் உள்ளது. அதனை கீழ்வரும் அறிவுரைகளை கடைபிடித்து நிவர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எலிகளால் ஏற்படும் இழப்பினை தவிர்த்தல்
1) நெல் பயிரில் எலிவெட்டு என்று சொல்லப்படும் சேதம் தென்பட்டால் உடனடியாக எலிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எலிகள் பயிரின் தூரின் அடிப்பாகத்தை கடித்து சேதத்தை ஏற்படுத்துகிறது. நெற்கதிர்களை இழுத்துச் சென்று வளைக்குள் சேமித்து வைக்கிறது. எலிகளை தஞ்சாவூர் கிட்டிகளை வைத்து பிடித்து அழிக்கலாம்.
2) சிங்க் பாஸ்பைடு அல்லது புரோமோடைலான் இவற்றில் ஏதேனும் ஒரு மருந்தில் (அருகில் உள்ள உர மற்றும் பூச்சி மருந்து கடைகளில் கிடைக்கும்) ஒரு பங்கு எடுத்துக்கொண்டு அதனுடன் 49 பங்கு பொரி அல்லது கருவாடு கலந்து, எலிகள் வரும் இடங்களில் வயலில் ஆங்காங்கே வைக்க வேண்டும். இவற்றை உண்ணும் எலிகள் மருந்தின் விஷத்தன்மையால் இறந்துவிடும்.
சரியான சமயத்தில் நெல்பயிரை அறுவடை செய்தல்
3) நெல் அறுவடை செய்வதற்கு ஒரு வாரம் முன்னதாக வயலிலிருந்து நீரை வடித்துவிட வேண்டும். இதனால் அறுவடை செய்வது எளிதாக இருக்கும். மேலும் பயிரும் விரைவில் முதிர்ச்சி அடையும். 80 சதவீதம் கதிர்கள் வைக்கோல் நிறத்தில் இருந்தால் பயிர் அறுவடைக்கு தயாராக உள்ளதாக கருதலாம். சில கதிர்களில் உள்ள மணிகளை எடுத்து, அதன் உமியை நீக்கி, அரிசி கடினமாக, கெட்டியாக உள்ளதா என்பதை கண்டறிந்து, பின்னர் அறுவடை செய்யலாம். உரிய காலத்தில் அறுவடை செய்தால் விளைச்சலில் இழப்பு ஏதுமின்றி முழு மகசூல் எடுக்கலாம்
வேளாண்மை துறை