கரும்பு விவசாயிகளுக்கு ஒரு நற்செய்தி
பாசன நீர் பற்றாக்குறையினை கருத்தில் கொண்டு, சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் போன்ற நுண்ணீர் பாசன முறைகளை தமிழக விவசாயிகளிடையே பிரபலப்படுத்துவதற்கு நடப்பாண்டில் சீரிய முயற்சிகளை வேளாண்மைத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் 2011 ஆம் ஆண்டு முதல் நுண்ணீர்ப் பாசன அமைப்புகளுக்கு சிறு/குறு விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.
கரும்பு பயிருக்காக சிறு/குறு விவசாயிகளுக்கு அதிக பட்சமாக எக்டருக்கு 1,01,012 ரூபாயும் இதரவிவசாயிகளுக்கு 75,759 ரூபாயும் நுண்ணீர்ப் பாசனத்திற்காக மானியம் வழங்கப்பட்டு வருகிறது. கரும்பு பயிர் அதிக நீர்த் தேவையுள்ள பயிராகும். எனவே, பாசன நீரினை சிக்கனமாக பயன்படுத்தி, கரும்பு அறுவடை ஆகும் வரை, பாசன நீரினை தொடர்நது எவ்வித பற்றாக்குறையுமின்றி பாசனம் செய்து, வெற்றிகரமாக கரும்பு சாகுபடி மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், நிலத்தடி நுண்ணீர்ப் பாசன முறையினை பிரபலப்படுத்துவதற்காக, கரும்பு பயிருக்காக மட்டும் அவரவர் கிணறு மற்றும் போர் வெல் நீர் ஆதாரத்தினை பொறுத்து தோராயமாக ரூ.36,000 முதல் 49,000 மதிப்பில் கூடுதலாக நீர் வடிப்பான் (FILTERS) உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை கரும்பு விவசாயிகளுக்கு வேளாண் துறை வழங்கி வருகிறது.
தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கரும்பு நடவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு வழங்கும் கரும்புக்கான கூடுதல் மானியம் பெற விரும்பும் விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநரையோ அல்லது வேளாண்மை அலுவலரையோ அல்லது உங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரையோ அணுகி பயன் பெறலாம்.
வேளாண்மைத் துறை