விவசாயிகளுக்கு உதவும் வேளாண் அறிவியல் மையத்தின் செயல்பாடு பற்றி தெரியுமா?
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக நிதி உதவியுடன் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் மாவட்டந்தோறும் ஒரு வேளாண் அறிவியல் மையம் நிறுவப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவை மாநில அரசின் வேளாண் பல்கலைக் கழகங்கள் அல்லது கால்நடை மருத்துவ பல்கலை கழகங்களின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றன. இந்த ஊழியர்களுக்கான சம்பளம் போன்ற செலவுகளையும் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையமே ஏற்கிறது.
இந்த வேளாண் அறிவியல் நிலையங்களில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு, வேளாண்மை, மீன்வளம், மனை அறிவியல் மற்றும் தோட்டக்கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பேராசிரியர்களும், விஞ்ஞானிகளும் பணியாற்றுகின்றனர். வேளாண் துறையில் நவீன கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமையான ரகங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பதற்காக இந்த வேளாண் அறிவியல் நிலையங்கள் செயல்படுகின்றன.
இந்த வேளாண் அறிவியல் நிலையங்களில் மாதிரி பண்ணைகள் அமைக்கப்பட்டு அறிவியல் ரீதியான கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் போன்ற தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்காக காட்சிப்படுத்தப்படுகின்றன. விவசாயிகளுக்கான பயிற்சிகள், பணியரங்குகள் உள்ளிட்டவை இங்கு மாதம்தோறும் நடத்தப்படுகின்றன.
விவசாயிகள் கால்நடை வளர்ப்பு, விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த இதர உப தொழில்களில் ஏற்படும் சந்தேகங்களுக்கு வேளாண் அறிவியல் மையத்தை அணுகி விளக்கம் பெற்றுக் கொள்ளலாம். மேலும், பண்ணை அமைப்பதற்கான ஆலோசனை போன்றவையும் இந்த வேளாண் அறிவியல் நிலையங்கள் மூலமாக வழங்கப்படுகின்றன. இவை ஆய்வகளையும் விவசாயிகளையும் இணைக்கும் இணைப்பு பாலமாக செயல்படுகின்றன.
அனைத்து மாவட்டங்களிலும் ஒரு வேளாண் அறிவியல் நிலையம் வீதம் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெரிய மாவட்டமாக இருந்தால் அந்த மாவட்டத்தில் இரண்டு வேளாண் அறிவியல் நிலையங்கள் செயல்படுத்தப்படுகின்றன. வேளாண் அறிவியல் மையங்களை அணுகி தேவைக்கேற்ற பயிற்சிகளையும் தகவல் தொழில்நுட்ப ஆலோசனைகளையும் பெற்று விவசாயிகள் பயன் பெறலாம்.
சி. அலிமுதீன்
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்,
சென்னை-07
நன்றிkrishijagran