சம்பநெற்பயிரில் ஆனைக் கொம்பன் ஈ தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
நடப்பு வருடம் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிரில் குறிப்பாக பின் நடவு செய்யப்பட்ட நெற்பயிரில் தொடர் மழையினாலும், தட்ப வெப்ப மாறுதல்களினாலும் ஆனைக் கொம்பன் ஈ என்ற பூச்சியின் தாக்குதல் காணப்படுகிறது. நெல் நடவு செய்த 35 முதல் 45 நாட்களில் புழுக்களின் தாக்கம் அதிகம் காணப்படும்.
இந்த பூச்சியானது மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாகவும், கொசுவை போல சிறியதாகவும், நீண்ட மெல்லிய கால்களுடன் இருக்கும். இதன் வாழ்க்கை சுழற்சியானது 14 முதல் 21 நாட்களை கொண்டது. இந்த ஈ தாக்குதலினால் நெற்பயிரில் தூர்களுக்கு பதிலாக கொம்பு போன்ற கிளைப்புகள் வெண்மை நிறத்திலோ அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலோ வெங்காய இலையைபோல் தோன்றும். பார்ப்பதற்கு யானையின் கொம்பை போன்ற தோற்றம் இருக்கும். தாய் ஈக்கள் சராசரியாக 100 முதல் 150 முட்டைகள் வரை இலைகள், தாள்களின் மேல்புறம் இடும். இதிலிருந்து வரும் புழுக்கள் நெற்பயிர்களின் குருத்துக்களை துளைத்து குழல்களாக மாற்றிவிடும். இதனால் பயிரின் தூர்களில் நெற்கதிர்கள் உருவாகாமல் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படும்.
ஆனைக் கொம்பன் ஈ தாக்குதலில் இருந்து நெற்பயிர்களை பாதுகாக்க, பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
நெல் வயலில் களைகள் இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்
விளக்கு பொறிகளை வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
ஆனைக் கொம்பன் நோய்க்கு எதிர்ப்பு திறனுடைய குறுகிய கால இரங்களான ஏடிடி-39, ஏடிடி-45, மத்திய கால இரகமான எம்டியு 3 ஆகியவற்றை நடவு செய்யலாம்.
பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மேல் தழைச்சத்து உரங்களை பயன்படுத்த கூடாது.
பரிந்துரைக்கப்பட்ட அளவு பொட்டாஷ் உரத்தினை இட வேண்டும்.
ஆனைக் கொம்பனின் இயற்கை எதிரிகளான நீளதாடை சிலந்தி, வட்ட சிலந்தி, ஊசித் தட்டான், குளவி போன்றவற்றை அழியாமல் பாதுகாக்க வேண்டும்.
10 சதவீதத்துக்கும் மேல் தாக்குதல் தென்பட்டால், ஒரு ஏக்கருக்கு கார்போசல்பான் 25மூ ஈ.சி- 400 மி.லி. அல்லது பிப்ரோனில் – 5மூ எஸ்.சி 500 கிராம் அல்லது குளோர்பைரிபாஸ் 20மூ ஈ.சி – 500 மி.லி. அல்லது பாசலோன் 35மூ ஈ.சி -600 மி.லி. அல்லது தயோமீதாக்ஸம் 25மூ நனையும் குருணை-40 கிராம்; ஆகிய மருந்துகளில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம் அல்லது பிப்ரோனில் 0.3மூ குருணை – 10 கிலோ அல்லது குயினைல்பாஸ் 5மூ குருணை – 2 கிலோ இதில் ஏதாவது ஒரு குருணை மருந்தை தேவையான அளவு மணலுடன் கலந்து வயலில் இட்டு கட்டுப்படுத்தலாம்.
வேளாண்மை துறை